அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஏற்கப்போவதில்லை: பாலஸ்தீன அதிபர் உறுதி

இஸ்ரேலுடனான மோதல் விவகாரத்தில் அமெரிக்காவின் எந்தவொரு அமைதி திட்டத்தையும் ஏற்கப்போவதில்லை என பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கடந்த 1948-ல் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான் சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது.

இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே ஜெருசலேம் விவகாரத்தில் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் பாலஸ்தீனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறியதாவது:

‘‘ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க நடுநிலை தவறி செயல்பட்டு வருகிறது. ஜெருசலேம் பிரச்னையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்காவை நம்புவதற்கு இடமில்லை. அமெரிக்காவின் எந்தவொரு அமைதித் திட்டத்தையும் இனிமேல் ஏற்கப்போவதில்லை’’ எனக்கூறினார்.