சரத்குமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நாட்டாமை’. அப்படத்தில் கிராமப் பஞ்சாயத்து காட்சிகள்தான் அதிகமாக இடம்பெற்றன. கிராமவாசிகள் மொத்தமாகத் திரண்டு பஞ்சாயத்துக்கு வந்துநின்று நாட்டாமையின் விசாரணையை கவனிப்பது போன்று காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். துணை நடிகர்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது தரப்படும் ஊதியமும் படத்தின் பட்ஜெட்டில் ஒரு சுமைதான். இந்த வகையில் தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு பணிபுரிந்திருக்கிறார் இயக்குநர்

.

கோபிசெட்டிபாளையத்தில் ‘நாட்டாமை’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்குள்ள, புகழ்பெற்ற மலைக்கோவிலில்தான் பஞ்சாயத்துக் காட்சிகளை படமாக்கி இருக்கிறார். சென்னையிலிருந்து துணை நடிகர்களைக் குறைந்த அளவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு குறைந்த ஆட்களை வைத்து, எப்படி பஞ்சாயத்து காட்சிகளைப் படமாக்குவார் என்று படக்குழுவினர் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கிறது.

 

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் அக்கோயிலுக்குக் கூட்டம் அதிகமாக வரும். அந்த நாட்களில் மட்டும் பஞ்சாயத்து காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர். ரவிக்குமார் – சரத்குமார் – விஜயகுமார் படப்பிடிப்பு என்று தெரிந்ததும் அதைக் காண கூட்டம் கூடியிருக்கிறது. பக்தகோடிகளாக அங்கே வந்து குவிந்த பொது மக்களைப் பஞ்சாயத்தில் நிற்க வைத்து, துணை நடிகர்களை அவர்களுக்கு முன்பு நிற்கும்படி செய்து வசனக் காட்சியை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். இப்படியே ஒட்டுமொத்த பஞ்சாயத்து காட்சிகளையும் பிரம்மாண்டமான கூட்டத்துக்கு நடுவே காட்சிப்படுத்தி இருக்கிறார்.