ஜெருசலேம் அங்கீகாரத்தை திரும்ப பெற ஐ.நா.வில் தீர்மானம் வீட்டோ மூலம் நிராகரித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: மத்திய கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜெருசலேம். 1967ம் ஆண்டு நடந்த போரில் இந்த நகரை ஜோர்டான் கைப்பற்றியது. இந்நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் நகரை தங்கள் நாட்டின் தலைநகர் என இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த சர்ச்சையால் இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் எல்லாம் டெல் அவிவ் நகரில் உள்ளன.
இந்நிலையில் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அங்கீகாரத்தை திரும்ப பெறக் கோரும் ஒரு பக்க வரைவு தீர்மானத்தை, ஐ.நா.வில் எகிப்து கொண்டு வந்தது.

அதில் ‘‘ஜெருசலேம் மீதான இஸ்ரேலின் உரிமையை நிராகரத்து 50 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்துள்ளது. அமெரிக்காவின் பல ஆண்டு கொள்கைகளுக்கு எதிராகவும், உலகின் மிக சிக்கலான பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு அச்சுறுத்தலாகவும் அதிபர் டிரம்ப் அறிவிப்பு உள்ளது. எனவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிக்கும் அறிவிப்பை அதிபர் டிரம்ப் திரும்ப பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வீட்டோ மூலம் நிராகரிப்பு: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இந்த வரைவு தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா நிராகரித்துள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல்
முறை. இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ‘‘அமெரிக்காவின் இறையாண்மையை பாதுகாக்கவும், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சியில் அமெரிக்காவின் பங்கை பாதுகாக்கவும் டிரம்ப் நிர்வாகம் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. நாங்கள் எங்கு தூதரகத்தை அமைக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எந்த நாடும் கூற முடியாது’’ என்றார்.