இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கிலும் பறிகொடுத்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

‘புதுமாப்பிள்ளை’ கேப்டன் விராட் கோலி இந்த தொடரிலும் ஆடாததால் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடருகிறார். ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் களம் இறங்குவார். மிடில் வரிசையில், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.

தினேஷ் கார்த்திக் பேட்டி

முந்தைய போட்டிகளை போன்றே இதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதை இந்திய அணி ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது. இந்த ஆண்டில் இந்திய அணி எந்த வித இரு நாடுகள் தொடரையும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியை தவிர்த்து) இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைப்பதில் இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள்.

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அணிக்கு வருகை தந்துள்ள இளம் வீரர்களுக்கு (பாசில் தம்பி, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. சிலர் 20 முதல் 30 ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவம் அவர்களுடைய பதற்றத்தை தணித்து, சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாக செயல்படுவதற்கு நம்பிக்கையை கொடுக்கும். அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மூத்த வீரர்கள் முடிந்தவரை இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கிறோம்’ என்றார்.

இலங்கை கேப்டன் கருத்து

இலங்கை அணி, ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை 112 ரன்னில் சுருட்டியது. ஆனால் அடுத்த இரு ஆட்டங்களில் ரோகித் சர்மாவின் இரட்டை செஞ்சுரி மற்றும் குல்தீப் யாதவ்– யுஸ்வேந்திர சாஹலின் சுழல் தாக்குதலில் அடங்கிப்போய் விட்டது. இந்த தொடரிலாவது வெற்றி பெற்று கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற இலங்கையின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இலங்கை கேப்டன் திசரா பெரேரா நிருபர்களிடம் கூறியதாவது:–

‘ஒரு நாள் தொடர் எங்களுக்கு மோசமாக அமைந்து விட்டது. ஆனால் முதலாவது ஒரு நாள் போட்டியில் இருந்து சில நல்ல வி‌ஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். இது புதிய தொடர். சிறப்பாக தொடங்குவோம் என்று நம்புகிறேன்.

இறுதிகட்டத்தில் அபாரமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் என்று திறமையான வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். நாளைய (இன்று) ஆட்டத்தில் முழு திறமையை வெளிக்காட்டுவோம். இளம் வீரர்களுக்கு நான் நிறைய நம்பிக்கையை கொடுக்க வேண்டியது அவசியம். 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும் என்பதன் மூலம் இளம் வீரர்களுக்கு நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. அவர்கள் நல்ல மனநிலையுடன் போட்டிக்கு தயாராக இருப்பதை அறிவேன்.

பனியின் தாக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் நாங்கள் 300 ரன்களை தாண்டுவது போல் நல்ல தொடக்கம் கண்டோம். ஆனால் திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறியதால் தோற்று போய் விட்டோம். இது மாதிரி மீண்டும் நடக்காது. இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். நாங்கள் குறிப்பிட்ட வீரர் குறித்து சிந்தித்து கொண்டிருக்கவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுவதில் கவனம் செலுத்துகிறோம்.

இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குவதால் இரு அணிகளும் பனிப்பொழிவின் தாக்கத்தை சமாளித்தாக வேண்டும். முதலில் பேட் செய்தால் 150 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு.’

இவ்வாறு பெரேரா கூறினார்.

கட்டாக் மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. 2015–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 92 ரன்னில் முடங்கி தோற்றதும், அதனால் ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி கலாட்டா செய்ததும் நினைவு கூரத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் அல்லது முகமது சிராஜ் அல்லது பாசில் தம்பி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: குணதிலகா, தரங்கா, சமரவிக்ரமா அல்லது குசல் பெரேரா, மேத்யூஸ், டிக்வெல்லா, குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), பதிரானா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா, நுவான் பிரதீப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.