கல்முனை தேர்தல்; வேட்பாளர் தொடர்பான அதிருப்திக்கும், குழப்பத்திற்கும் யாரெல்லாம் பொறுப்பு?

(பாண்டிருப்பு கேதீஸ்)

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து த.தே.கூட்டப்பின் கட்சிகளிடையே ஆசனப்பங்கீட்டில் முரண்பாடு ஏற்பட்டு இணக்கமும் ஏற்பட்டது ஆனால் கல்முனையில் தமிழரசுக்ட்சிக்கும் ரெலோவுக்குமிடையில் விரிசல் மேலும் வலுவடைந்து வேட்பாளர் தெரிவு தொடர்பாக இறுதிமுடிவின்றி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தறுவாயை நெருங்கிய நிலையிலும் அதிருப்திகள் இக்கட்டுரை எழுதும்வரை தொடர்கிறது.

தமிழர் பூர்வீக நிலமான கல்முனையை தமிழர்களிடம் இருந்து பிரித்து தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கும் சதிகள் தொடரும் நிலையில் இந்த தேர்தல் கல்முனை தமிழ் மக்களை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

அத்துடன் வட்டார ஆசனங்களுடன் 40 வீதம் விகிதாசார முறையிலும் கிடைக்க வேண்டிய தமிழருக்கான ஆசனங்களை வாக்குகள் சிதறாமல் பெறவேண்டிய கட்டாயமும் உள்ள இந்த தேர்தலை ஒற்றுமையுடன் மக்களை குழப்பமடையச் செய்யாமலும் பல கோணத்தில் பல கட்சிகள் போட்டியிடுவதால் தமிழரின் வாக்குகளை பிரிப்பதற்கு இடமளியாமல் கட்சி அரசியல் சுய அரசியல் என்பவற்றுக்கு அப்பால் பொதுநோக்கத்துடன் கட்சிக்காக மக்கள் இல்லை மக்களுக்காகத்தான் கட்சி என்பதை நினைவில் நிறுத்தி செயற்பட தவறியதன் வெளிப்பாடே இன்று கல்முனை தேர்தல் தொடர்பில் குழப்பமான நிலைமை தொடர்கிறது இதற்கான பொறுப்பை யார் ஏற்பது?

ஆசனப்பங்கீடு தொடர்பில் ரெலோவும் தமிழரசுக்கட்சியும் தலா நான்கு நான்கு என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தாலும் வேட்பாளர் தெரிவில் இவர்களது செயற்பாடு ரொலோ என்றும் தமிழரசுக்ட்சி என்றும் தனிப்பட்ட கட்சிஅரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே நாட்களை கட்த்தியிருந்தார்கள் ஆனால் இந்த தேர்தல் மிக முக்கியமானது இதனை எவ்வாறு ஒற்றுமையாக நுணுக்கமாக மக்கள் கருத்துடன் பொறுத்தமானவர்களை இனங்கண்டு களத்தில் இறக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து ஒற்றுமையாக செயற்பட தவறியுள்ளார்கள்.

இவ்வாறே  சில தமிழர்கள் ஏனைய கட்சிகளிலும் கல்முனையில் போட்டிபோட முனைகின்றமையானது கல்முனை தமிழர் நிலையறிந்து செயற்படாமல் அவர்களின் சுயநலத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இவர்களும் பொறுப்பாகும்.

வேட்பாளர் தெரிவில் ரெலோ உபதலைவர் கென்றி மகேந்தரன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், அவரின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மக்கள் விருப்புக்கு இடம்கொடுக்காதவாறு செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும் வந்திருந்தன.

வேட்பாளர்களாக விண்ணப்பத்தவர்களது தகவல்கள் ஓரளவு வெளியாகியதைத்த தொடர்ந்து மக்கள் மத்தியில் இந்த வேட்பாளர்கள் தொடர்பில் அதிருப்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. சர்ச்சைக்குரிய வேட்பாளர்களை தவிர்த்து வேட்பாளர் தெரிவுக்கான பொறுப்பை ஆரம்பத்திலேயே வட்டார மக்களிடம் வழங்கியிருக்கலாம்.

கூட்டம் 18 ஆம் திகதிவரை தாமதித்தது ஏன்? இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படும் வேட்பாளர் தொடர்பில் ஏற்கனவே அதிருப்திகள் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது சர்ச்சைக்குரிய வேட்பாளர்களை தவிர்த்து மக்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவரை கல்முனை வட்டாரத்தில் தெரிவு செய்ய தவறியமை தொடர்பாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை 12 ஆம் வட்டாரம் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களைக்கொண்ட இரட்டை வட்டாரமாகும் இங்கு தமிழரின் வாக்குகளை பல வழிகளில் சிதறடித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குகுறியாக்கும் முயற்சிகளும் பல கோணங்களில் முன்னெடுக்கப்படுகிறது, இங்கு தமிழருக்கான ஆசனத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லோருக்குமுண்டு. இங்கு வேட்பாளர் தொடர்பாக குழப்பமான நிலைமையை தவிர்த்திருக்க வேண்டிய பொறுப்பு இந்த வட்டாரத்தில் வசிக்கும் ரெலோ உப தலைவர் கென்றி மகேந்தரன் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

இவ்வாறே தமிழரசுக்கட்சியிடமும் வேட்பாளராக விண்ணப்பித்திருந்த சில வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் எழுந்திருந்தன. தமிழரசுக்கட்சியும் இந்த இடத்தில் தங்களது கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேட்பாளர் தெரிவு தொடர்பில் வேட்பாளர் தெரிவுக்கான பொறுப்பை மக்களிடம் வழங்கி பொதுவான கூட்டங்களை நடாத்தி வேட்பாளர் தொடர்பாக இரண்டு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் த.தே.கூட்டமைப்பு என்ற கோணத்தில் நகர்ந்திருக்க வேண்டும்.

நற்பிட்டிமுனையில் வேட்பாளர் தெரிவு தொடர்பாக ஒரு கூட்டம் ஆரம்பத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது இந்த நடைமுறையயை ஏனைய வட்டாரங்களிலும் செய்திருந்தால் வேட்பாளர் தெரிவு தொடர்பாக முடிவெடுக்க மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் வேட்பாளர் விண்ணப்பங்கள் தொடர்பான  வெளிப்படுத்தலும் ஏற்பட்டிருக்கும், ஆனால் இரண்டு தரப்பும் தங்கள் தங்கள் கட்சி நலன் சார்ந்ததாகவே செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கில்லை.

கல்முனை பிரதேச தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் உறுதியாக சிந்திக்கின்றார்கள் விமர்சனங்களுக்கப்பால் வாக்குகள் சிதறாமல் ஒரே தமிழ்க்கட்சிக்கு அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது என்ற நிலைப்பாடு பரவலாக ஏற்பட்டிருக்கிறது இதனை சரியாக பயன்படுத்தி மக்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரண்டு தரப்பும் தனிப்பட்ட கட்சி நலன்களை ஒரு பக்கம் வைத்து விட்டு ஒற்றுமையாக செயற்பட்டு வேட்பாளர் தெரிவுகளிலும் தங்கள் செல்வாக்குகளை திணிக்காமல், மக்களிடம் வழங்கியிருந்தால் இந் குழப்பம் இறுதிவரை ஏற்பட்டிருக்க வாய்பில்லை என்றே கூறலாம்.

வேட்பாளர் தெரிவில் மக்கள் விருப்புக்கு மாறாக செயற்படமுடியாது என்றும் கல்முனை வாழ் தமிழ் மக்களில் அக்கறையற்று செயற்படும் தனி நபர்களின் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே மக்களின் நலனிலும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் சிறந்த சேவை செய்யும் சிந்தனையுள்ளவர்களை அந்த அந்த வட்டாரங்களில் தெரிவு செய்ய முடியாமல் இந்த தொகுதிக் கிளையில் தலைவர், செயலாளராக தொடர்ந்து செயற்படுவது எங்களது மனசாட்சிக்கும், கல்முனை தமிழர்களுக்கும் இழைக்கும் துரோகமாக அமையலாம் என்று கூறி தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி தலைவரான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களும் செயலாளரான முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஜேயக்குமார் ஆகிய இருவரும் நேற்று (19) இராஜனாமாச் செய்திருந்தார்கள்.

இந்த முடிவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த முடிவவை வேட்பாளர் தெரிவில் குழப்பங்கள் ஆரம்பத்தபோதே அறிவித்து மக்களிடம் வேட்பாளர் தெரிவு செய்யும் பொறுப்பை கொடுத்திருந்தால் மக்களுக்கும் அவகாசம் இருந்திருக்கும்.

தற்போது பதவி விலகியதால் இந்த குழப்பங்களுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பில் இருந்து விலகமுடியாது ஆகவே காலம் மிக மிக குறைவாகவே உள்ளது இந்த குழப்பங்களுக்கு மக்களுடன் இணைந்து எஞ்சியிருக்கும் மணித்தியாலங்களை சரியாக பயன்படுத்தி தீர்வு காணவேண்டிய பொறுப்பு அனைவருக்குமுள்ளது.

வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சி தலைவர்கள் செல்வாக்கு செலுத்துவதற்கு இடம்கொடுத்தமை மக்களின் தவறுமாகும். ஒவ்வவொரு வட்டாரத்திலும் மக்களாக கூடி இளைஞர்கள் பெரியோர்கள் என எல்லோரும் இணைந்து வேட்பாளர்களை முடிவெடுத்து தங்கள் வட்டாரம் சார்பாக வேட்பாளர்களை கட்சியிடம் கொடுத்திருந்தால் இவ்வாறான குழப்ப நிலை ஏற்பட வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும். ஏனவே இன்றைய குழப்ப நிலைக்கு பொறுப்பு அனைவருமே எனவே விரைவாக கூடி விட்டுக்கொடுப்புடன் அவசரமாக முடிவுகளை எடுத்து ,வாக்குகள் பிரியாமல் தமிழர் ஆசனங்களை காப்பாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையும் அவசரத் தேவையுமாகும்.

பாண்டிருப்பு கேதீஸ்

By admin