கல்முனைத் தமிழர்கள் கட்சிகளை தவிர்த்து ஒரணியில் போட்டியிட ஆயத்தம்; தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கூட்டம்!

கல்முனை பிரதேச தமிழர்கள், அரசியல் கட்சிகளை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக ஒரு அணியில் மட்டும் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, கல்முனை தமிழர்களால் பரவலாக முன்வைக்கப்படுவதனால், அவ்வாறான ஒரு பொதுத் தீர்மானத்தை கூடி ஆராய்து எடுப்பதற்காக கல்முனை தமிழர் மகாசபையின் ஏற்பாட்டில், நாளை மறுதினம் சனிக்கிழமை (09) பி.ப 3.00 மணிக்கு கல்முனை 01 கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் தமிழர்களின் ஆசனங்களை காப்பாற்றவேண்டியதன் முக்கியத்துவம் கருதியும், தமிழ் கட்சிகளிடையே ஆசனப்பங்கீடுகள் தொடர்பாக முரண்பாடுகள் நிலவுவதாலும், பல கோணங்களில் கல்முனை பிரதேச தமிழர் வாக்குகள் சிதறடிக்க மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள் என்பவற்றின் மத்தியில் காலத்தின் தேவை கருதி கட்சிகளுக்கப்பால் அனைவரும் ஒரணியில் போட்டியிட வேண்டும் என்பதையே கல்முனை பிரதேச தமிழர்கள் தற்போது எதிர்பார்க்கின்றார்கள்.

இதனடிப்படையிலேயே கல்முனை பிரதேச அனைத்து தமிழ் கிராம மக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வேட்பாளர் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும் என்ற பல விடயங்களை பொதுமக்களின் கருத்துக்களுடன் ஆராய்ந்து, மக்களின் ஒருமித்த தீர்மானத்தின்படி முடிவுகளை எடுப்பதற்காக இக் கூட்டம், கல்முனை தமிழர் மகா சபையினால் நடாத்தப்படவுள்ளது.

இக் கூட்டத்திற்கு அனைவரும் தவறாது பங்குபற்றி கருத்துக்கள், ஆலோசனைகளை முன்வைத்து ஒருமித்து ஒரு முடிவினை எடுக்வேண்டியது கல்முனை தமிழரின் அவசரமான தேவையாகவுள்ளது. ஆகவே அனைவரும் பங்குகொள்ள வேண்டியதும் எமது கடமையாகும்.

 

By admin