அரசியல் அதிரடிப்பாய்ச்சலுக்கு தயாராகும் மைத்ரி – கொழும்பு அரசியல் தலைகீழாக மாறும் நிலைமை !!

ஜனாதிபதி தேர்தல் எப்போது வரும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பேசப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் தனது பதவிக்காலம் தொடர்பில் தீவிர கரிசனை காட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முனைந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் சொல்கின்றன.

ஏற்கனவே தனது பதவிக்காலம் தொடர்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை அறிவித்திருந்தாலும் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் ஒன்றை அறிய ஜனாதிபதி தரப்பு முற்பட்டு வருகிறது.

அதன்படி ஜனாதிபதி பதவிக்காலத்தை தீர்மானிக்கும் 19 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்ட தினத்தில் இருந்து தான் ஜனாதிபதியின் பதவிக்காலம் கணிக்கப்படுமா என்பது பற்றி உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோர ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளது

” ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை இப்போதே ஜனாதிபதி கோரமாட்டார். இப்போதுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உறவு நல்லதாக இல்லை.இப்போதைய பிரதம நீதியரசர் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்.அதன் பின்னர் புதிய பிரதம நீதியரசரை ஜனாதிபதியே நியமிப்பார்.அதற்கு அரசியலமைப்பு கவுன்சில் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பில்லை. அந்த நியமனத்தின் பின்னர் இந்த வியாக்கியானத்தை உயர்நீதிமன்றத்திடம் மைத்ரி வினவுவார். அந்த புதிய பிரதம நீதியரசர் அமைக்கும் பென்ச் இதனை விசாரிக்கும். அப்படியாக ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிய இன்னும் நாட்கள் இருப்பதாக தீர்மானம் வந்தால் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அழைப்பை விடுக்கவும் மைத்ரி முயல்வார்.எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் வரலாம் ” என்று பெயர் குறிப்பிட்ட விரும்பாத ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான முக்கியஸ்தர் ஒருவர் ”தமிழன்” செய்தித் சேவையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த வியூகம் கொழும்பு அரசியலை புரட்டிப்போடும் என கருதப்படுகிறது.

நன்றி -www.thamilan.lk

 

By admin