கல்முனையை நான்காகப்பிரிக்க் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் முன்வைத்திருக்கும் பிரிப்பு முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கல்முனையை பூர்வீகமாகக்கொண்ட தமிழர்களின் நிலங்களையும் குடிப்பரம்பலையும் சிதறடித்து எங்களது இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையிலே கல்முனை பிரிப்பு தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் உள்ளது. இந்த பிரிப்பு முறையை நாங்கள் எற்றுக்ககொள்ள மாட்டோம்.

கல்முனை மாநகரசபையை நான்காகப் பிரிப்பதாக இருந்தால் எமது பூர்வீக நிலங்களான கல்முனை நகர் தரவை பிள்ளையார் ஆலய எல்லையில் இருந்து ஆரம்பிக்கும் எமது நிலங்கள் குடிப்பரம்பல் அனைத்தும் உள்ளடங்கிதாகவே எமக்கான சபை உருவாக்கப்படவேண்டும். எங்களது இந்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி செய்யவேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு என கல்முனை பிரதேச தமிழ் மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் தெரிவித்தனர்.

கல்முனை விவகாரம் தொடர்பாக கல்முனை பிரதேச தமிழ் மக்களுடனான கலந்துரையாடல் நேற்று (28) கல்முனை தமிழ் பிரிவு பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில், அம்பாறை மாவட்ட த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்ட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் ஆகியோர் கல்முனை மாநகரசபை பிரிப்பு தொடர்பில் கல்முனை பிரதேச பொது அமைப்புக்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் கருத்துக்களை கேட்டறிந்து கலந்துரையாடியபோது கல்முனை பிரிப்பு தொடர்பாக தங்கள் கோரிக்கையை கல்முனை பிரதேச தமிழ் மக்கள் இவ்வாறு முன்வைத்தனர்.

கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இரு தரப்புக்குமிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதியும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin