த.தே. கூட்டமைப்பின் கல்முனை கூட்டம்; இப்பிரதேச தமிழ் மக்களுக்கு ஏமாற்றமா? – கேதீஸ் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டம் கல்முனையில் (25) நடைபெற்றிருந்தது. இக்கூட்டம் கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு திருப்தியாக அமைந்ததா என்ற விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டியது முக்கியம் என்று நினைக்கின்றேன்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தெளிவு படுத்தும் மாவட்ட மட்ட கலந்துரையாடலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவருகிறது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம் கல்முனையில் நடாத்தப்படும் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் உட்பட கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் கல்முனை பிரிப்பு தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ள சமகாலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமையானது, கல்முனை பிரதேச தமிழ் மக்களிடையே இக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் கல்முனையில் நடைபெற்ற இக்கூட்டமானது கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் நிறைந்ததாகவே நடந்து முடிந்துள்ளது என்ற ஆதங்கத்தை பலரிடம் உணரமுடிகிறது.

கல்முனை மாநகர சபை பிரிப்பு தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சசை, அவை தொடர்பாக கல்முனை பிரதேச தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள், இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையே சமகாலத்தில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், அவைகளில் இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி இரு தரப்புக்குமிடையில் மீண்டும் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமகள் பங்குகொள்ளும் கல்முனை கூட்டத்தில் இவ்விடயங்கள் தொடர்பாகவும்மக்களிடம் விவரிக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் என்ற எதிர்பார்ப்பு இப்பிரதேச தமிழ் மக்களிடம் இருந்தபோதும், இவ் எதிர்பார்ப்புக்களுக்கு  மாறாக கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூட்டம் நடந்து முடிந்துள்ளமை கல்முனை பிரதேச தமிழ் மக்கள், இளைஞர்கள், பொதுச்சிந்தனையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏறபடுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தின்போது கல்முனை பிரதேசம் தொடர்பாக எழுந்துள்ள சமகால முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்கென இந்த கூட்டத்தில் நேரம் ஒதுக்கப்பட்டு, கல்முனை மாநகரசபை பிரிப்பு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும், எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கல்முனை தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கேற்ப எவ்வாறு பேசவுள்ளது என்பது தொடர்பிலும் கருத்துக்களை பரிமாற தவறவிடப்பட்டுள்ளது.

இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் தவறா?  அல்லது இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்த கட்சியின் பிரதேச மட்ட உறுப்பினர்களின் தவறா? மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் தவறா?  யாருடைய தவறாக இருந்தாலும், கல்முனை பிரதேச தமிழர்கள் எதிர்பார்த்ததற்கேற்ப இக் கூட்டத்தில் கல்முனை சமகால விடயம் தொடர்பிலும் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்த தவறியமை வேதனையான விடயமே.

கல்முனையில் இக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தது, கல்முனையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளார்கள், புனரமைக்கப்பட்ட கல்முனை தொகுதி தமிழரசுக்கட்சி கிளை நிருவாகம் உள்ளது, முன்னாள் கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளார்கள் இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கூடி ஆராய்ந்து ,இந்த கூட்டத்தின்போது கல்முனை விவகாரம் தொடர்பாக கலந்துரையாட, கருத்துக்களை பரிமாற குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதை உறுதிப்படுத்த தவறியது ஏன்?  அதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்தவில்லை? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுகிறது.

இவ்வாறான விடயங்களை வலியுறுத்துவதற்கு கொடுக்கும் முக்கியத்துவங்களைவிட ,எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பில் தங்களின் செல்வாக்குகளை உறுதிசெய்ய முனைப்பு காட்டுவதிலேயே கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள் சிலரின் நடவடிக்கைகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கல்முனை பிரதேசத்திற்கு மட்டுமல்ல எந்த பிரதேசத்திற்குச் சென்றாலும்  கட்சியின் நிகழ்சி நிரலானது  பிரதேசங்களின் சமகால நிலைமை, அம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் அமைவதை எதிர்காலத்தில் உறுதி செய்வதே ஆரோக்கியமான விடயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை விவகாரத்தில், கல்முனை பிரதேச தமிழ் மக்களின் உணர்வுகள், கோரிக்கைளை கவனத்திலெடுத்து செயற்படுத்த வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் முக்கிய பொறுப்பாகும்.

 -புவிநேசராசா கேதீஸ்-

 

By admin