புதியகலப்புத்தேர்தல் முறையில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் தெரிவு எவ்வாறு அமையும்?
காரைதீவுப் பிரதேசபையை உதாரணமாகக்கொண்டு விளக்கப்படுகின்றது.!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உள்ளுராட்சித்தேர்தல் கலப்புமுறையில் நடைபெறவிருக்கிறது.

கலப்புத் தேர்தல் முறை என்பது தொகுதிவாரி தேர்தல் முறையையும் விகிதாசார தேர்தல் முறையையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இம் முறை ஜேர்மனியில் சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றது. 1946 இல் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி மெக்சிக்கோ நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.

2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய கலப்புதேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சித்தேர்தல் அதிலும் வட்டாரமுறை கலந்த த்தேர்தல் என்பது ஊர்த்தேர்தல். இங்கு கட்சிகளைவிட கொள்கைகளை விட தனிநபர் மற்றும் குடும்பச் செல்வாக்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை நாமறிவோம்.

கலப்புத் தேர்தல் முறையின் நன்மைகளாக பலமான எதிர்க்கட்சி உருவாகும்.விருப்பு வாக்கு பிரச்சனைகள் ஏற்படாது.சிறுபான்மையினருக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்கள் கிடைக்கும்.பிரதிநிதிக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படும்..பிரதேச ரீதியாகவும் வட்டார ரீதியாகவும் அபிவிருத்தி ஏற்படும் என்பவற்றை இனங்காட்டமுடியும்.

குறைபாடுகளாக கட்சி ஆதிக்கம்.எல்லை பிரிப்பு ரீதியான குறைபாடுகள்.பட்டியல் மூலம் தகுதியற்றோரும் வருதல்.கணிப்பிடுதல் மக்களுக்கு விளங்காமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

வரலாற்றில் முதன்முறையாக இந்தப்புதிய கலப்புத் தேர்தல் முறையில் உள்ளூராட்சிதேர்தல் நடைபெறவிருப்பதனால் இது பற்றிய தெளிவு விளக்கம் மக்களுக்கு முதலில் தெரியப்படுத்தவேண்டியதவசியமானதொன்றாகும்.

இலங்கையில் விகிதாசாரத்தேர்தல் முறைமை(P.R.System) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இதே மாதிரியான ஒரு நிலைவரம் காணப்பட்டது. அதேபோன்று இப்போது பலருக்கு இப்புதிய முறைமை பற்றி போதிய தெளிவில்லாமல் இருப்பது கண்டுகொள்ளத்தக்கது.

அதனால் உதாரணத்திற்கு காரைதீவுப் பிரதேசபையை மையமாகவைத்து இதனை விளங்கிக்கொள்ளமுடியும் எனக்கருதி ஓர் அரசறிவியல் பட்டதாரி என்ற அடிப்படையில் இச்சிறு விளக்கக்கட்டுரையை வரைகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியின்கீழ்வரும் காரைதீவுப்பிரதேசசபை எல்லையுள் 17917 தமிழ்முஸ்லிம் மக்கள்; வாழ்ந்துவருகின்றார்கள். 12972 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதியுள்ளவர்களாவர். இங்கு புதிய முறைமையின்படி 07வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காரைதீவில் 04வட்டாரங்களும் மாளிகைக்காட்டில் 2வட்டாரங்களும் மாவடிப்பள்ளியில் 1வட்டாரமுமாக மொத்தம் 07 வட்டாரங்கள் உள்ளன.

 

உறுப்பினர்கள் எண்ணிக்கை!
உள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்த மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் இருப்பர்.

ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும். அதாவதுஇ ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக் கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீதத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக காரைதீவு பிரதேசசபைக்கான வட்டாரங்களின் எண்ணிக்கை 07 ஆகும். அது 60 சதவீதமாக கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீதத்திற்கும் இன்னும் 04 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த அங்கத்தவர்கள் தொகை 11ஆக அமையும்.

ஆக காரைதீவுப்பிரதேசசபைக்கான தெரிவுசெய்யப்படவிருக்கும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இதனை 02.11.2017 ஆம் திகதிய அதிவிசே வர்த்தமானிப்பிரகடனத்தின்படி மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை அறிவித்துள்ளார்.
1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின்பிரகாரம் தெரிவுசெய்து கொள்ளவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 07உம் 04உம் என விதந்துரைத்துள்ளார்.
காரைதீவுப்பிரதேச சபையின் உறுப்பினர்களது பதவிக்காலம் 2018 பெப்ருவரி 15ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருதல் வேண்டும் என அமைச்சர் பைசர்முஸ்தபா பிரகடனம் செய்துள்ளார்.

வேட்பு மனு!

வேட்பு மனு கட்சிகள் அல்லது குழுக்கள் ஒரே வேட்பு மனுவில் இரண்டு வேட்புமனுப் பகுதிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஒர வேட்புமனுப்பத்திரத்தில் இருபகுதிகள் உள்ளன அவ்வளவுதான்.

முதலாவது வேட்பு மனுப்பகுதி!
முதலாவது வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும் வேட்பு மனுவாகும். இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க வேண்டும். இவர்களுள் 10 சதவீத பெண்கள் இருத்தல் வேண்டும். எனினும் வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயர் இருக்காது மாறாக கட்சியின் பெயரும் சின்னமும் வெற்றுக்கூடும் இருக்கும்.சுயேச்சைக்புழு எனின் இலக்கமிருக்கும்.

அதன்படி காரைதீவுப்பிரதே சபைக்கு இந்த முதலாவது வேட்புமனுப்பகுதியில் 07 வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைக்குழுவும் நியமித்தல்வேண்டும். அதிஸ்டவசமாக இங்குள்ள வட்டாரங்கள் அனைத்தும் தனிஅங்கத்தவர் வட்டாரமாகும். ஆதலால் ஒவ்வொரு வேட்பாளரை அந்தந்த கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் நியமிக்கவேண்டும்.
பெண்வேட்பாளர்களைப்பொறுத்தவரையில் இச்சபைக்கு ஒரு பெண்வேட்பாளர் இந்த முதல்பகுதியில் நியமிக்கப்படவேண்டும். அதாவது 07வட்டாரத்தில் ஒரு வட்டாரத்திற்கு கட்டாயம் ஒரு பெண்வேட்பாளரை நியமித்தே ஆகவேண்டும். அதாவது 06ஆண்வேட்பாளர்களும் 1 பெண்வேட்பாளரும் நியமிக்கப்படவேண்டும். இன்றேல் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

இரண்டாவது வேட்பு மனுப்பகுதி!
இரண்டாவது வேட்பு மனுப்பகுதியில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40 சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும் மேலதிகமாக 03 நபர்களும் சேரக்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.
இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

அதன்படி காரைதீவுப்பிரதேச சபைக்கு இந்த இரண்டாவது வேட்புமனுப்பகுதியில் 04வேட்பாளர்களுடன் மேலதிகமாக 03 வேட்பாளர்களின் பெயர்களைச்சேர்த்து அதாவது 07 வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைக்குழுவும் நியமித்தல்வேண்டும்.

விகிதாசார முறையில் பெண்வேட்பாளர்களைப்பொறுத்தவரையில் 50வீதம் என்றால் இந்த இரண்டாவது பகுதியில் குறைந்தது 03பெண்கள் நியமிக்கப்படவேண்டும். அதாவது விகிதாசாரமுறையில் கட்டாயம் மூன்று பெண்வேட்பாளரை நியமித்தே ஆகவேண்டும். அதாவது 04ஆண்வேட்பாளர்களும் 03 பெண்வேட்பாளர்களும் நியமிக்கப்படவேண்டும். இன்றேல் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

அப்படியாயின் மொத்தத்தில் காரைதீவுப்பிரதேசபைக்கான வேட்புமனுவில் மொத்தமாக 071007 என்றவகையில் 14 வேட்பாளர்கள் களமிறக்கப்படவேண்டும். அவர்களில் 10ஆண்வேட்பாளர்களும் 04பெண்வேட்பாளர்களும் அடங்கவேண்டும்.
இந்த விகிதம் அல்லது வீதம் மாறியமைந்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

கடந்த காலங்களைப் போன்று இம்முறை இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவில்லை. இம்முறை 30வீதமாக அது மாறியுள்ளது.ஆனால் அதுவும் கட்டாயமில்லை. ஆனால் இளைஞர் என்று குறிபிட்டால் அந்தவயது கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

வேட்புமனுவானது கட்சியென்றால் அதன் செயலாளரும் சுயேச்சைஎன்றால் அதன் தலைவரும் ஒப்பமிடவேண்டும்.

கட்டுப் பணம்
கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 1500 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.
சுயேச்சைக் குழுக்கள் வேட்பாளர் ஒருவருக்கு ரூபா. 5000 வீதம் கட்டுப் பணம் செலுத்துதல் வேண்டும்.

காரைதீவுப்பிரதேசசபையைப் பொறுத்தவரை கட்சியொன்று 14×1500= 21000ருபா சுயேச்சைக்குழுவொன்று 14×5000 = 70000 ருபா செலுத்துதல் வேண்டும்.

கட்சியென்றால் அதன் செயலாளரும் சுயேச்சைஎன்றால் அதன் தலைவரும் ஒப்பமிடவேண்டும். கட்சியென்றால் அதன் செயலாளர் அல்லது அவரது முகவர் சுயேச்சைஎன்றால் அதன் தலைவர் அல்லது முகவர் கட்டுப்பணத்தைச் செலுத்தவேண்டும்.
தேர்தலில் ஒரு கட்சியானது ஒரு ஆசனத்தையேனும் வென்றால் கட்டுப்பணம் மீளச்செலுத்தப்படும். அல்லது மொத்தமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீளளிக்கப்படும்.

வேட்புமனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள்!
இந்தச்சந்தர்ப்பங்கள் இருவகையாக நடைமுறைப்படுத்தப்படும். ஒருவகையில் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படல். இரண்டாவது வகையில் பகுதியாக அதாவது ஒரு வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுதல்.

முழுமையாக நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம்!
மொத்தமாக ஒருவேட்புமனுவின் இருபகுதிகளிலும் மொத்த வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட்டிருத்தல்வேண்டும். காரைதீவுபிரதேசத்தைப்பொறுத்தவரை மொத்த 14வேட்பாளர்களும் ஒரே வேட்புமனுவின் இருபகுதிகளிலும் உள்ளடக்கப்பட்டு வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும். ஒருவரது பெயராவது மனுவில் இல்லாவிடில் முழுமையாகநிராகரிக்கப்படும்.
தேவையான பெண்பிரதிநிதித்துவம் குறிப்பிட்டவீதத்தில் இடம்பெறாவிடின் அவ்வேட்புமனு முழமையாக நிராகரிக்கப்படும். காரைதீவில் வட்டாரமுறையில் ஒரு பெண்வேட்பாளரும் விகிதாசார முறையில் 03வேட்பாளர்களுமாக மொத்தம் 04பெண்வேட்பாளர்கள் உரியமுறையில் நிரப்பப்ட்டிருக்கவேண்டும். இன்றேல் முழுமையாக நிராகரிக்கப்படும்.
கட்டுப்பணம் உரியமுறையில் செலுத்தப்படாவிட்டாலும் முழுமையாக நிராகரிக்கப்படும். கட்சியென்றால் அதன் செயலாளரும் சுயேச்சைஎன்றால் அதன் தலைவரும் கைச்சாத்திட்டிருக்கவேண்டும். இவர்களின் கையயொப்பத்தை ஒரு சமாதானநீதிவான் முறையாக அத்தாட்சிப்படுத்தியிருக்கவேண்டும். இவ்வாவிடில் முழுமையாக நிராகரிக்கப்படும்.
வேட்புமனுவை தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைப்பதுதொடர்பில் கட்சியென்றால் அதன் செயலாளர் அல்லது அவரது முகவர் சுயேச்சைஎன்றால் அதன் தலைவர் கையளிக்கவேண்டும். இவர்களைத்தவிர்த்த வேறுயாராவது கையளித்தால் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.

வேட்புமனுவில் ஒருவர் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம்!
மொத்தமாக ஒருவேட்புமனுவின் இருபகுதிகளிலும் மொத்த வேட்பாளர்களும் கையnழுத்திட்;டிருத்தல்வேண்டும்;. ஒருவராவது ஒப்;பமிடாவிடின் அவரது பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படும். . ஏனைய வேட்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
காரைதீவுபிரதேசத்தைப்பொறுத்தவரை மொத்த 14வேட்பாளர்களும் ஒரே வேட்புமனுவின் இருபகுதிகளிலும் உள்ளடக்கப்பட்டு; கையெழுத்திருக்கவேண்டும். ஒருவர் ஒப்பமிடாவிடின் அவரது பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படும். நாடுபிளவுபடுவதற்கு எதிராக வேட்பாளர் உறுதியுரை செய்துகொடுத்தல்வேண்டும். அதை ஒப்படைக்காவிடின் அவரது பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படும்.

வாக்களிப்பு முறை!

வாக்காளர்கள் தமக்கு வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்புகின்ற கட்சியின் சின்னத்திற்கு அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்திற்கு நேரே புள்ளடியிடுதல் வேண்டும். மாறாக விருப்புவாக்குகளுக்கான வெற்றுக்கூடுகளோ அல்லது வேட்பாளர்களின் பெயர்களோ வாக்குச்சீட்டில் இருக்காது.

வாக்கெண்ணல்
வாக்குகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும். காலையில் வாக்களிப்பு நிலையங்களாகவிருக்கும் நிலையங்கள் மாலை 4மணிக்குப்பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களாக மாறும்.அவசர நிலமைகளில் தெரிவத்தாட்சி அலுவலரினால் சூழ்நிலை கருதி வாக்கெண்ணும் நிலையங்கள் மாற்றப்படலாம். ஒரு வட்டாரத்தில் 2 அல்லது 3 நிலையங்கள் இருந்தால் அனைத்தும் அங்கேயே எண்ணப்படும்.

சுடச்சுட தேர்தல் முடிவுகள்
வட்டார பிரதிநிதித்துவம்!
வட்டாரங்களில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் ஆகக் கூடுதலான வாக்கினை பெறும் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அந்தஇடத்திலேயே சுடச்சுட அறிவிக்கப்படுவார்.
கடந்தகாலங்களில் வாக்குப்பெட்டிகள் அம்பாறைக்குக்கொண்டுசெல்லப்பட்டு அங்கு வாக்கெண்ணும்நிலையங்களில் வாக்கெண்ணப்பட்டு நள்ளிரவு அல்லது மறுநாள் காலை முடிவுகள் வெளியிடப்படுவது வழமையாகும். ஆனால் இம்முறையில் அப்படியல்ல. அவரவர் ஊர்களில் அந்தந்த வாக்களிப்புநிலையங்களலேயே தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும்.
அதன்படி காரைதீவில் 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் அந்த இடத்திலேயே அறிவிக்கப்படுவார்கள்.

விகிதாசார முறைமை.
உள்ளுராட்சிப் பிரதேசம் ஒன்றில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் பிரிக்கப்பட்டு பெறப்படும் தொகை தகைமை பெறும் எண்ணிக்கை எனப்படும்.

ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் தகைமை பெறும் எண்ணினால் பிரிக்கப்பட்டு கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் உரித்தாக வேண்டிய உறுப்பினர்களின் தொகை தீர்மானிக்கப்படும்.

காரைதீவுப்பிரதேசபைக்கான தேர்தலில் 12972 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் சுமார் 11500 பேர் வாக்களித்தனர் என்று எடுத்துக்கொண்டால் அளிக்கப்பட்டவாக்குகளில் 500 நிராகரிக்கப்பட்ட 11000வாக்குகள் மொத்தமாக செல்லபடியாகும் வாக்குகளாகக்கருதப்படும்.

காரைதீவுப்பிரதேசசபைக்குத் தெரிவுசெய்யப்படவேண்டிய மொத்த உறுப்பினர்கள் 11 ஆகும்.
கணிப்பு இந்த செல்லுபடியான வாக்குகளான 11000 வாக்குகளை மொத்த உறுப்பினர்களான 11ஆல் பிரித்தால் 1000 என விடைவரும்.
இந்த 1000தான் தகைமைபெறும் எண் ஆகும்.

இப்போது 07வட்டாரங்களில் “ஏ” என்ற கட்சி 03வட்டாரங்ளையும் “பி “என்றகட்சி 3வட்டாரங்களையும் ” சி” என்ற கட்சி 1வட்டாரத்தையும் வெற்றிபெற்றுள்ளது என வைத்துக்கொள்வோம்.

அதன்படி 03வட்டாரங்களில் வெற்றிபெற்ற “ஏ” என்ற கட்சிக்கு 3உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் மற்ற 03வட்டாரங்களில் வெற்றிபெற்ற “பி ” என்ற கட்சிக்கு 3உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் மீதி 01வட்டாரத்தில் வெற்றிபெற்ற “சி “என்ற கட்சிக்கு 1உறுப்பினர் கிடைத்துள்ளார் என்றும் வைத்துக்கொள்வோம்.(இது மாறுபடலாம்)

இங்கு 7வட்டாரங்களில் ஏ பி சி என்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட முழுவாக்குகளும் எண்ணப்படும்.
அங்கு “எ”என்ற கட்சிக்கு 5000 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்று எடுத்துக்கொண்டால் அதனை முதலில் பெற்ற தகைமை பெறும் எண்ணிக்கயான 1000ஆல் பிரித்தால் 5 உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.
அதில் ” ஏ” என்ற கட்சி ஏலவே வட்டாரமுறையில் 03 உறுப்பினர்களைப்பெற்றுவிட்டதால் மீதி 02 உறுப்பினர்கள் விகிதாசாரமுறையில் கிடைப்பார்கள்.

அடுத்து “பி” என்ற கட்சிக்கு 4000 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்று எடுத்துக்கொண்டால் அதனை முதலில் பெற்ற தகைமை பெறும் எண்ணிக்கiயான 1000ஆல் பிரித்தால் 4 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் “பி” என்ற கட்சி ஏலவே வட்டாரமுறையில் 03 உறுப்பினர்களைப்பெற்றுவிட்டதால் மீதி 01 உறுப்பினர் விகிதாசாரமுறையில் கிடைப்பார்.

அடுத்து “சி”என்ற கட்சிக்கு 1000 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்று எடுத்துக்கொண்டால் அதனை முதலில் பெற்ற தகைமை பெறும் எண்ணிக்கையான 1000ஆல் பிரித்தால் 1 உறுப்பினர் கிடைப்பார். அதில் சி என்ற கட்சி ஏலவே வட்டாரமுறையில் 01 உறுப்பினரைப்பெற்றுவி;ட்டதால் இக்கட்சிக்கு நேரடியாக விகிதாசாரமுறையில் உறுப்பினர் கிடைக்கவாய்ப்பில்லை. எனினும விகிதாசாரமுறையில் 3வது அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சி “சி” என்பதால் எஞ்சிய மீதி 01 உறுப்பினர் “சி” கட்சிக்குக் கிடைக்கவாய்ப்புண்டு.

ஏனைய சிறுகட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுவுக்கு 1000க்குட்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற்றதால் ஆசனங்கள் கிடைக்க இங்கு வாய்ப்பில்லை எனலாம்.

ஏற்கனவே வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பான உறுப்பினர்களின் தொகைஇ கட்சிகளுக்கு உரித்தான தொகையிலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி உறுப்பினர்களை நியமிக்குமாறு கட்சிகள் கோரப்படும்.
அவ்வாறு நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்படலாம்.
பெண் அங்கத்தவர் நியமனம்
ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் மொத்த அங்கத்தவர் தொகையில் 25 சதவீதமானவர்கள் பெண்களாக இருப்பதனை உறுதி செய்வதற்காக மேலே விபரிக்கப்பட்டவாறு விகிதாசார அங்கத்தவர்களை நியமிக்கின்ற போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை பெண்களை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கீழே சொல்லப்படும் விதத்தில் பின்வருமாறு கணக்கீடு செய்து அறிவுறுத்தல் வழங்கும்.

அதாவது ஒரு கட்சியில் விகிதாசார அடிப்படையில் குறித்த கட்சிக்கு உரித்தான உறுப்பினர் தொகையினை விட அதிகமான அங்கத்தவர்களை வட்டார அடிப்படையில் பெற்றிருந்தால் அக்குறித்த கட்சிகளில் பெண் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்கட்சிகள் மேலதிகமாக பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் ஒரு கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையும் 03 பேருக்கு குறைவான உறுப்பினர்களையும் பெற்றிருந்தால் அக்கட்சியும் பெண்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.

அதாவது காரைதீவில் அளிக்கப்பட்ட வாக்குகள் 11500 எனின் அதன் 20வீதம் 2300 ஆகும். இதற்கக்குறைவாக ஆக “சி” என்ற கட்சியே 1000வாக்குளைப்பெற்று 1 ஆசனம் பெற்றுள்ளது. இக்கட்சி பெண் பிரதிநிதியை நியமிக்கவேண்டிய அவசியமில்லை.

ஏனைய கட்சிகளின் வாக்குகளின் விகிதாசார அடிப்பைடயில் பாராளுமன்ற தேர்தலின் பின்பு தேசியப்பட்டியல் தீர்மானிக்கபடுவது போன்று குறித்த சபைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதமான பெண் அங்கத்தவர்கள் தெரிவு உறுதிப்படுத்தப்படும். இதன் போது கட்சியின் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் பெண் அங்கத்தவர்கள் நியமிக்கப்படலாம்.

இதன்படி காரைதீவுப்பிரதேசசபையில் மொத்தமாகத்தெரிவாகும் 11 உறுப்பினர்களில் மூவர் பெண்கள் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் ஒரு உள்ளுராட்சி பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு பிரதிநிதி இருப்பதுவும் மொத்த அங்கத்தவர்களில் 25 சதவீதமானோர் பெண்களாக இருப்பதுவும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்படுவதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா- A.D.E…  
(B.A., PGDE(MERIT), M.Ed.) 

By admin