விடுதலை வீரர்களுக்கு அஞ்சலிகள்.

மண்ணில் புதையுண்ட மறத்தமிழர்களே
மறுபடி எழுந்து வர மாட்டீரோ
மண்ணில் உறங்கும் விதைகளென
மாவிருட்சமாய் எழுந்து வர மாட்டீரோ

திண்ணிய தோளுடன் போர் கொண்டீர்
திலகம் காயுமுன் பார் வென்றீர்
எண்ணிய பொழுதிலே பகை வென்றீர்
இவ்வுலகம் உதிக்க நடை கொண்டீர்

எத்தனை நரிகள் ஊளையிட்டும்
ஒத்தையாய் களம் தனில் புறப்பட்டீர்
அத்தனை ஓலமும் நடுநடுங்க
அக்கினிப் பிளம்பென உருப்பெற்றீர்

சத்தியம்,தர்மம், நீதியெல்லாம்- இந்த
சாக்கடை மண்ணில் வந்திடுமா
வஞ்சகம்,சூழ்ச்சி,துரோகமெல்லாம்- நம்
தமிழனின் மீதே விதியாமோ

வெஞ்சினம் கொண்ட வேங்கைகளே
விடியல் வருமென்று புறப்பட்டீர்
வஞ்சகம் தன்னில் வீழ்ந்ததனால்
வானுலகில் தேவர்கள் ஆகி விட்டீர்

உங்கள் கல்லறைகள் மீதிலே
எரியும் தீபங்கள் சுடர்களல்ல
எங்கள் உதிரம் கொதித்தேறி
எரியும் தழல்களின் துளிகளவை

இனியும் மீள்வான் தமிழன்
என் ஆசான் உரைத்தது போல….

அழிந்தது போல் தான் இருக்கும் ஆயின்
அறுகம்புல்லிற்கு அழிவேது
பொழியும் ஒரு துளி பட்டவுடன்
அது பொட்டென்று எழுமே அழியாது

மண்ணில் புதையுண்டமறத்தமிழர்களே
மறுபடி எழுந்து வர மாட்டீரோ
மண்ணில் உறங்கும் விதைகளென
மாவிருட்சமாய் எழுந்து வர மாட்டீரோ. …

 

இரு விழி எரிதழலென…..
நீலாவணை சே… இந்திரா

By admin