கல்முனை பிராந்தியத்தில் அதிகரிக்கும் கொரோனா – மருதமுனையில் நேற்று மூன்று மரணங்கள்

-கேதீஸ்-

கொவிட் தொற்று கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்கமுடிகின்றது. நேற்றைய தினம் மட்டும் 52 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மருதமுனையைச் செர்ந்த 39 வயதுடைய ஒரு இளைஞர் உட்ப மூவரும் சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.


அக்கரைப்பற்று 14 ,நாவிதன்வெளி 10 ,கல்முனை வடக்கு 2, கல்முனை தெற்கு 2, காரைதீவு 5, சாய்ந்தமருது 1 ,நிந்தவூர் 4 ,அட்டாளைச்சேனை 2 ,ஆலையடிவேம்பு 1,பொத்துவில் 6 ,இறக்காமம் 3,சம்மாந்துறை 2 என தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.
நிலைமைகள் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது…

தற்போது கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றது. தொடர்ச்சியாக எமது சுகாதார துறையினரின் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இருந்தாலும் பொது மக்கள் நிலைமையை உணர்ந்து சுயமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணியவேண்டியது தங்கள் தங்கள் உயிர்களை காப்பதற்காவும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலம் சார்ந்ததுமாகும் என்பதை உணரவேண்டும். கட்டாயப்படுத்தி செய்விக்கும் அளவுக்கு இருக்க கூடாது. பாதுகாப்பு பிரிவை, சுகாதார துறையை கண்டால் மட்டும் மாஸ் அணியும் நிலைமைகளை அவதானிக்கையில் வேதனையாகவுள்ளது.


மருதமுனையில் நேற்றைய தினம் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் ஐந்து மரணங்கள். அதிகமானோர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் நாங்கள் நேற்று ஒரு கலந்துரையாடலை நடாத்தியிருந்தோம். அதன்படி இன்று நூற்றுக்கு அதிகமான பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதென தீர்மானித்துள்ளோம்.

மருதமுனையின் இரண்டு வீதிகளில் அதிக பாதிப்பு காணப்படுகின்றன. இருமல் ,காச்சல் ஏதாவது அறிகுறி இருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுவாக அறிவித்தல் விடுத்துள்ளோம். இன்றைய பரிசோதனை முடிவுகளைக்கொண்டு மருதமுனை கிராமம் முடக்கப்படுமா? என்பது தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும். உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் ஒத்துழைப்ப வழங்காமையும் இவ்வாறு கொவிட் தாக்கம் மருதமுனையில் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும் என்றார்.