சிறுவர் இல்லங்களில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக Smart TV மற்றும் கணனிகள் கையளிப்பு


கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் கல்முனை, களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை ஆகிய நீதி நிர்வாகப் பிரிகளில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்கள், சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் விதத்தில் Smart TVமற்றும் கணனிகள் என்பன கையளிக்கும் நிகழ்வு கல்முனை சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.S.சிவகுமார் அவர்களின் தலைமையில் கல்முனை மெதடிஸ்த சிறுவர் இல்லத்தில் நேற்று (2021.10.08) நடைபெற்றது.


இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.A.H.M.அன்சார் அவர்களும், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருமதி.R.றிஸ்வானி அவர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர், மாகாண ஆணையாளர் ஆகியோரால் ‘கொரோணா’ பெருந்தொற்றுக் காலத்தில் சிறுவர் இல்லங்களில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி முன்னேற்றம் என்பன தொடர்பில் தமது அமைச்சும் திணைக்களமும் இணைந்து எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன்; குறித்த இல்லங்களின் முகாமையாளர்களிடம் Smart TV, கணனிகள் என்பன கையளிக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் நன்னடத்தைக் காரியாலயப் பொறுப்பதிகாரி திரு.T.மதியழகன், ஏனைய நீதி நிர்வாகப் பிரிவுகளின் நன்னடத்தைப் பொறுப்பதிகாரிகள், அப்பிரிவுகளில் கடமையாற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்லங்களின் முகாமையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.