(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  உள்ள சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லியுடன் சாப்பாடு வழங்கிய சம்பவம் தொடர்பாக 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறும்  சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டதையடுத்து உடனடியாக  பொது சுகாதார பரிசோதகர்கள்  சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைத்தனர்.

குறித்த வைத்தியசாலையில் இயங்கிவரும் சிற்றுண்டிச்சாலையில் சம்பவதினமான நேற்று வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவர் பணம் செலுத்தி மதிய உணவை பாசலாக வாங்கி  சாப்பிட பாசலை விரித்தபோது அந்த உணவில் பல்லி இருப்பதை கண்டு உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முiறையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்திவருபவருக்கு எதிராக மட்க்களப்பு நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை உணவு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்தனர். 

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு நீதவான் எடுத்துக் கொண்ட நிலையில் குறித்த சிற்றுண்டிச்சாலையை நடாத்திவருபவரை 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறும் உடனடியாக சிற்றுண்டிச்சாலையை மூடி சீல் வைக்குமாறும் இந்த சிற்றுண்டிச்சாலையை தற்போது ஒப்பந்தத்தில் நடாத்தி வருபவரின் ஒப்பந்தத்தை நிறுத்திவேறு நபருக்கு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டாh.; 

இதனையடுத்து பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறி தலைமையிலான பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் இன்று உடனடியாக  சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைத்தனர்.