கல்முனை பிராந்திய பாரிசவாத சிகிச்சை அணி ஸ்தாபிப்பு!

கல்முனை பிராந்தியத்தில் பாரிசவாத சிகிச்சை அணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணனின் ஏற்பாட்டில் சுகாதார சேவைகள் பணிமனையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பாக பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாரிசவாதத்தினால் வளர்ந்த நாடுகளிலும் சரி நமது நாட்டிலும் சரி அதிகளவு நோயாளிகள் இறப்பது விகிதாச்சாரத்தில் மூன்றாவது இடத்தில் பதியப்பட்டுள்ளது.


பாரிசவாதம் ஏற்பட்டால் ஒருவரின் வலது பக்கமோ இடது பக்கமோ உடற்தொழிற்பாடுகள் செயலிழந்து போகும். அவர் வாழ்நாள் பூராக நடக்க முடியாமல் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியாமல் அவஸ்தைப் பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் பாரிசவாதம் ஏற்பட்டு சில நிமிடங்களில் சி.ரி ஸ்கான் பரிசோதனை செய்யப்பட்டு மூளையில் இரத்தம் உறைந்து இருந்தால் அவர்களுக்கு அதை கரைப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு சில மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் அவர்களை சாதாரண நிலைக்கு திரும்பி எடுக்கக்கூடிய சிகிச்சைமுறைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் இந்த முறை சில இடங்களில்தான் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சி.ரி ஸ்கான் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற டாக்டர் இதயகுமாரின் VP முனைப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்; ஒரு செயலணியை உருவாக்கி மூளையில் குருதி உறைகின்ற பாரிசவாத நோயாளிகளுக்கு உடனடியாக அதை கரைக்ககூடிய செய்முறை கலந்துரையாடல் ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மிக விரைவில் கல்முனை பிராந்தியத்தில் காணப்படுகின்ற சகல வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதன் மூலமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இந்தச் செயற்பாடுகள் வளர்ந்த நாடுகளைப் போன்று முன்னெடுக்கப்படும்.


நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களும் வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டிருந்தனர்.