ஈ. பி. டி முக்கியஸ்தர் செல்வவடிவேல் கூறுகிறார்

மீனவர்களின் ஆர்ப்பாட்ட போராட்டம் என்பது எம். ஏ. சுமந்திரன் எம். பியின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஆகும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு சரியானது என்று இந்திய அரசாங்கம் கண்டு கொண்டு உள்ளது, விரைவில் உரிய தீர்வுகள் கை கூடும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார்.

இவர் இது குறித்து கல்முனைநெற்றுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு

சுமந்திரனுக்கு பொழுது போகவில்லை என்று நினைக்கின்றேன். அதே நேரத்தில் மாட்டை கொண்டு புல் தரையில் உழுகின்ற வித்தை அவருக்கே கை வந்த கலை. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் வருகின்றன அல்லவா?

மீனவர்களின் ஆர்ப்பாட்டம் என்பது சுமந்திரனின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கோ மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெயரிலான இவரின் ஆர்ப்பாட்டங்கள் குறித்து முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டதாக இல்லை,

இப்போதுதான் அவசரமாக விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன என்று அறிகின்றேன். மீனவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. சரியான முறையில் அவை அணுகப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

கடற்றொழில் அமைப்புகளை சேர்ந்த சிலரை சுமந்திரன் பிடித்து வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுகின்றார். இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக விஜயம் மேற்கொண்டு வந்த சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார்.

பிற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு சரியானது என்று வரவேற்று அறிக்கை வெளியிட்டார். அதாவது இந்திய அரசாங்கம் அமைச்சர் டக்ளஸின் நிலைப்பாடு சரியானது என்று கண்டு கொண்டு உள்ளது. சுவாமி புறப்பட்டு டில்லி சென்று உள்ளார்.

விரைவில் உரிய தீர்வுகள் கை கூடும் என்று நம்பிக்கை உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க,சுமந்திரன் எம். பியின் நிகழ்ச்சி நிரலிலான மீனவர் போராட்டம் அர்த்தம் அற்றது. அவருக்கு ஒரு மேடை தேவைப்படுகின்றது. அதே நேரம் மாகாண முதலமைச்சர் பதவி கனவுகளில் இருப்பவர்களுக்கு மக்களை உசுப்பேற்ற வேண்டிய தேவை உள்ளது.