தெற்கிலும் வெடிக்கும் என்றார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீனவர்களும் விவசாயிகளும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் குதிக்க உள்ளனர்.
நாளை 17ஆம் திகதியும் நாளை மறுதினம் 18ஆம் திகதியும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட உள்ள இந்த போராட்டங்களுக்கு,அனைத்து தரப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் எம். பி கோரி உள்ளார்.

மீனவர்களின் போராட்டம் 17 ஆம் திகதி இடம்பெறுகின்றது. இழுவை படகுகள் மூலமான சட்ட விரோத மீன் பிடி மீதான தடையை பாரபட்சம் அற்ற விதத்தில் அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வர வேண்டும், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு முற்று புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.

இப்போராட்டத்தின் முக்கிய அம்சமாக முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை படகு மூலமாக கடல் வழியாக ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுகின்றது. மறுநாள் விவசாயிகள் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்னால் காலை 9.00 மணி முதல் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இரசாயன உர பாவனை மீதான திடீர் தடை விவசாய உற்பத்திகளை மாத்திரம் அன்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒரேயடியாக பாதித்து இருப்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள தவறி உள்ளது என்பதே விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டு ஆகும்.

சுமந்திரன் எம். பி மேலும் தெரிவிக்கையில், இப்போராட்டங்கள் விரைவில் தெற்குக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளன. உண்மையில் ஒரே நாட்களிலேயே தெற்கிலும் நடத்த ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்டது, பின் ஏற்பாட்டில் தாமதம் நேர்ந்து விட்டது, ஆயினும் அதற்கான ஏற்பாடு கூட்டமைப்பு அல்ல, ஏற்பாட்டாளர்களுடன் பேசி இருந்தோம் என்றார்.