அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய திட்டத்திற்கமைய, Biometrics (உயிரியல் குறியீட்டு பாதுகாப்பு) உடன் கூடிய டிஜிட்டல் தேசிய அடையாள இலக்கத்தை 2023 க்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் விரும்புவதாகத் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அலங்கார மீன், உள்நாட்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பல நாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

2023 இற்குள் அனைவருக்கும் Biometrics உடனான டிஜிட்டல் தேசிய அடையாள இலக்கம்-A Digital National Identity Number with Biometrics Will be Issued Every Citizer by 2023

பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக அமைச்சில் கொன்சியூலர் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் தற்போதைய நிலையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்தில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய திட்டத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக் காட்டியதுடன், Biometrics (உயிரியல் குறியீட்டு பாதுகாப்பு) உடன் கூடிய டிஜிட்டல் தேசிய அடையாள இலக்கத்தை 2023 க்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்தார்.