செல்வி வினாயகமூர்த்தி.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இரவு வேளையில் கடமைக்கு வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற பின்தங்கிய அதிகஷ்டப் பிரதேசங்களில் வாழ்கின்ற ஏழைமக்களுக்கு பிரதான உயிர்நாடியாக பனங்காடு பிரதேசவைத்தியசாலை விளங்குகின்றது.

மத்திய மருந்தகமாக இருந்து 2006ம்ஆண்டு குறித்த வைத்தியசாலை பிரதேசவைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக ஒரு ஆரம்ப வைத்தியசாலையாகவே இயங்கி வந்துள்ளது.இந்நிலையில் பலரின் அர்பணிப்புள்ள முயற்சியால் 2008 ம் ஆண்டு பிரசவ கூடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 10க்கு மேற்பட்ட பிரசவங்களும் இவ் வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளதுடன் இப்பிரதேசத்துக்கென முன்மாதிரியான வைத்திய சாலையாகவும் திகழ்ந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல வருடங்களாக இவ் வைத்தியசாலையில் இரவு நேரகடமையில் ஒரு வைத்தியர் இல்லாமை நீண்டகால குறைபாடாக நிலவிவருகின்றது.

24 மணிநேர அவசரசிகிச்சைப்பிரிவுடன் அண்மைக்காலமாக ஒரு பிரதேச வைத்தியசாலையாக இயங்கத்தொடங்கிய போதிலும் இரவு நேர கடமையில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர் இல்லாமையால் தூர கிராமங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக இவ் வைத்தியசாலை நோக்கி வரும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் நகரப்பகுதியிலுள்ள வைத்தியசாலையில் பெரும் சிரமங்களின் மத்தியில் அனுமதிக்கப்படுகினர்.

இக்குறைபாடு தொடர்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருந்தி சங்கம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பல தடவை அணுகி குறைபாடு தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதுவரையில் தீர்வின்றி இவ் அவல நிலை தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.