(சம்பூர் நிருபர் – பா.பிரியங்கன்)

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்துக்கு நேரில் வருகை தந்து மீனவ உறவுகளின் பிரச்சினைகளை செவிமடுக்க வேண்டும் என்று இம்மாகாணத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் கோரி உள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, அவர் நேரில் வந்து பிரச்சினைகளை செவிமடுத்தால் நிச்சயம் உரிய தீர்வுகளை பெற்று தருவார், அவருடைய வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றோம் என்று இச்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தார்.

திருகோணமலை பட்டிணமும் சூழலும் மீனவர் சங்கத்தினர் கருத்து கூறுகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் சுமார் 05 மாதங்களுக்கு முன் கடலில் காணாமல் போய் உள்ளனர், அவர்களின் குடும்பத்துக்கு இன்னமும் எந்த தீர்வும் கிடைக்கவே இல்லை, உரிய தீர்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்று தர வேண்டும் என்று முக்கியமாக கோரினர்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவர் சம்மேளனத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன் கருத்து கூறுகையில் கொரோனா தொற்று பரம்பல் காலத்தில்கூட எமது மக்களுக்கு வேண்டிய மீன் உணவுகளை பெற்று கொடுத்த வண்ணம் உள்ளோம், ஆனால் எமது குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் இடர் கால நிவாரணங்கள் கிடைப்பதாக இல்லை, அமைச்சர் இதில் தலையிட்டு உரிய தீர்வை பெற்று தர வேண்டும் என்று கோரினர்.

அம்பாறை மீனவர் சங்கத்தினர் பேசுகையில் மீனவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்ட வண்ணம் உள்ளனர், சட்ட விரோத மீன்பிடி முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், மீனவர்களின் தொழில் துறைக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட வேண்டும், அனர்த்த கால நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.