துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள சுங்கத் திணைக்களம் தயாராகி வருகின்றது.

இவ்வாறு தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள்  அடங்கிய கொள்கலன்களில், வழக்கு சம்பவங்களுடன் தொடர்புடையவையும் காணப்படுவதனால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் சுங்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கும், இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகத்திற்கும் பணிப்புரை வழங்கியிருந்தார். டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் இவ்வாறு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.