இன வெறியின் உச்சமே கைதிகள் மீதான அராஜகம் இழந்த  செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே அமைச்சர் காடைத்தனம்உள்ளக அனுசரணைக்கு 

ஒத்துழைப்பு வழங்கும் தமிழ் கூட்டமைப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்

                                          த. தர்மேந்திரா

சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் இழந்து போய் உள்ள செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயால் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரதூரமான அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம். பி ‘கல்முனை நெற்’ க்கு தெரிவித்தார்.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி மற்றும் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம். பி ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த வியாழக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட சென்றனர்.

 முதலில் இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பாடு இராஜாங்க அமைச்சரால் நேரடியாக அச்சுறுத்தப்பட்ட இரு கைதிகளையும் பொலிஸாரின் பிரசன்னத்துக்கு மத்தியில் சந்தித்து பேச அனுமதித்தனர்.

 இது தொடர்பாக கல்முனைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது செல்வராசா கஜேந்திரன் எம். பி தெரிவித்தவை வருமாறு

 தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் அங்கு பாரதூரமான உயிராபத்து நிலவுகின்றது.

நடந்து முடிந்த சம்பவத்தின் பின்னணியில் இவர்கள் பழிவாங்கப்படலாம் என்கிற பாரதூரமான சூழல் கண் முன் நிற்கின்றது. அவர்களால் எம்முடன் சுதந்திரமாக உரையாடக் கூட முடியவில்லை. அச்சத்தில் உறைந்து காணப்பட்டனர்.

 கடந்த 73 வருடங்களாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வன் செயல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியன மாறி மாறி வந்த அரசாங்கங்களாலேயே 

திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டன. 1983 கறுப்பு ஜூலை கலவரத்தை ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு இருந்தது. 

 ஆனால், தமிழ் மக்கள் மீது காலம் காலமாக தொடர்ந்தேச்சையாக கட்டவிழ்த்து விடப்பட்டு வந்திருக்கின்ற வன்செயல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றுக்கு எந்த அரசாங்கங்களுமே பொறுப்பேற்று இருக்கவில்லை. இவற்றின் உச்ச பட்சமாகவே இராஜாங்க அமைச்சரால் தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்டு உள்ளார்கள். 

 சிங்கள மக்கள் மத்தியில் இழந்து போயுள்ள அரசாங்கத்தின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிமிர்த்துகின்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி ந்நிரலுக்கு அமையவே இராஜாங்க அமைச்சரால் தமிழ் கைதிகள் பலி கடாக்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்று எமது கட்சி விசுவாசிக்கின்றது.

 இதே நேரத்தில், தமிழ் அரசியல் கைதிகள் மீது இராஜாங்க அமைச்சரால் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு அரசாங்கம் மாத்திரம் அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும் என்பது எமது வலுவான நிலைப்பாடாகும்.

 ஏனென்றால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பே பாதுகாத்து வருகின்றது. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு உள்ளக பொறிமுறை மூலம் விசாரணை நடத்தி தீர்வு காண்பார்கள் என்று அரசாங்க தரப்பால் ஜெனிவாவில் சொல்லப்பட்டபோதெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு அனுசரணை வழங்கியது.

 பொறுப்பு கூறல் என்று ஒன்று இல்லாத தன்மையும், தமிழர்கள் மீது எதை செய்தாலும் கேட்பதற்கு எவரும் இல்லை என்கிற துணிச்சலுமே இராஜாங்க அமைச்சரின் அராஜாகத்துக்கு ஊக்கிகளாக அமைந்து நிற்கின்றன. இனியும் எதுவும் நடக்கலாம் என்கிற அச்சம் தொடரவே செய்கின்றது.

 இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற வரை அவர்களை தொடர்ந்தும் அநுராதபுரம் சிறைச்சாலையின் தடுத்து வைத்திருப்பது என்பது பேராபத்தானது. எனவே, அவர்களை தமிழர் பிரதேசங்களில் இருக்க கூடிய சிறைச்சாலைகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோருகின்றோம்.