ஐ.நாவுக்கு ஓரணியில் அறிக்கை அனுப்பும் முயற்சி தோல்வி-

அறிக்கை அனுப்ப நான்கு அணிகள் தயாராகின்றன.

-குணா-

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு தமிழர் தரப்பில் இருந்து ஒருமித்த குரலில் அனுப்புவதற்கு தமிழ்க்கட்சிகள் எடுத்த பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

அதேநேரம்,  மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளது.

   தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்புவதற்கு தயார்படுத்திய ஆவணத்தில் ஒப்பமிட்டிருக்கின்றன. ஆனாலும், கூட்டமைப்பிலுள்ள முக்கிய கட்சியான தமிழரசுக்கட்சி அதற்கு ஒப்பம் இட மறுத்ததோடு, தாங்கள் தனியாக அறிக்கை ஒன்றை தயார் படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. அதன் பிரதிகளும் தமிழ்த் தேசியத்திலுள்ள சகல கட்சிகளுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

   தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்பந்தன் எம்.பி இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்.

   இதற்கிடையில், தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி எம்.பியுமான  சிவஞானம் சிறிதரன் தலைமையில் மற்றொரு குழுவும் அறிக்கை ஒன்றை தயாரித்து அனுப்பி வைக்கவுள்ளது.

இதில், அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு தேசிய பட்டியல் எம்.பியான தவராசா கலையரசன் உட்பட மேலும் சிலர் ஒப்பம் இட்டுள்ளதாக தமிழ்க் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

   நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனியாக அறிக்கை ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது. இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு செவ்வாய்கிழமையளவில் அறிக்கையை அனுப்பி வைக்கவுள்ளதாக கஜேந்திரன் எம்.பி கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.

   ஐ.நா கூட்டத்தொடர், ஆரம்பமாவதற்கு முன்னர், ஓரணியில் தமிழர் தரப்பு ஆதங்கங்களையும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறலில் இருந்து நழுவும் போக்கையும் தெளிவுபடுத்தி அறிக்கை அனுப்புவதற்கு முடிவெடுத்த நிலையிலும், தமிழ்க் கட்சிகளுக்குள் ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், நான்கு அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பப்படவுள்ளன.

தமிழ்க் கட்சிகளின் இணக்கம் எட்டப்படாத இந்த பிளவுபட்ட போக்கு தமிழ் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல். எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் சித்ததார்த்தன், ரொலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கருணாகரம் (ஜனா), வினோ நோதராதலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி சிறிகாந்தா, சீ.வி.விக்னேஸ்வரன்,; உட்பட முக்கியஸ்த்தர்கள் ரெலோ தயாரித்த  அறிக்கையில்  கையொப்பம் இட்டுள்ளனர்.

   ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினமே இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிவிப்பை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ‘மிச்செல் பச்லெட்’ வெளியிட உள்ளார்.

   இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சிகள் ஓரணியில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்தன. இது தொடர்பில் இணையவழி (சூம் ) ஏகோபித்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.

   இந்த கலந்துரையாடலை ஒழுங்கமைப்பதில் ரொலோ கட்சி முக்கிய பங்கு வகித்து செயற்பட்டது.  தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.

   ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பவது, அரசியில் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிய பின்பே, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

  இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எழுதும் அறிக்கையை அனுப்பும் பணியை ரொலோ முன்னெடுத்ததோடு, அதன் பிரதிகளை தமிழரசுக்கட்சி உட்பட சகல தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பியும் இருந்தது.