வாரம் ஒரு படைப்பாளி- இராசையா நாகலிங்கம். (அன்புமணி)

(கடந்த 24.04.2021   கல்முனை நெற் வாராந்த மின்னிதழில் கோவிலூர் செல்வராஜன் எழுதிய இந்தவார படைப்பாளி கட்டுரையை இங்கு தரகின்றோம்.

இப்பத்தியில் இவ்வாரம் இடம்பெறுபவர் மட்டக்களப்பின் பழம்பெரும்பதியாம் ஆரையம்பதியின் மூத்த எழுத்தாளர் அரசஉயர்நிருவாகி  அன்புமணி என புனைபெயரில் அழைக்கப்படும் இரா.நாகலிங்கம் அவர்கள்.

அன்புமணி 
இராசையா நாகலிங்கம், ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர்.
மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர்.  மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார்.
இராசையா நாகலிங்கம், ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர்.
இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி  இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட்/கச்சேரி  உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து, ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி அவர்களின்   செயலாளராகவும்  பணியாற்றினார்.
இவரின் ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இல்லத்தரசி (சிறுகதை) 1980 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 – அன்பு வெளியீடு
  • தமிழ் இலக்கிய ஆய்வு 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
  • எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
  • பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்

அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்கள்:மகோன் வரலாறு – தங்கேஸ்வரி,குள கோபடன் தரிசனம் – தங்கேஸ்வரி,நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர், ஆகியன.

கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-சீ. மந்தினி புராணம் – வித்துவான் ச. பூபாலலிங்கம்,மாமங்கேஸ்வர பதிகம் – வித்துவான் அ. சரவணமுத்தன்,சனிபுராணம் – வித்துவான் அ. சரவணமுத்தன்.

இவர் ‘மலர்’ என்ற இலக்கிய இதழை 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை வெளியிட்டார். ஈழத்து இதழியல் வரலாற்றில், ‘மலர்’ கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.

பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல பாடசாலைக் காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் நடித்துப் புகழ் பெற்றார். ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, ‘பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு ‘சாகித்தியமண்டலப்’ பரிசு கிடைத்தது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. ‘தமிழ்மணி’  வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது ,கலாபூசணம்,பல்கலை வித்தகர்,போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன.
எங்கள் மண்ணின் படைப்பாளி  அன்புமணி அவர்களின் புகழ் நாமம் வாழ்க. ..
கோவிலூர் செல்வராஜன்.
அன்றும் இன்றும் !

கிழக்கு வெளுக்கும்,கீழ்வானம் சிவக்கும்,காகம் கரையும்,குருவிகள் கீச்சிடும்,பசுக்கள்,எருதுகள் குரல் கொடுத்து அற்புதமான காலை வேளையை புலப்படுத்தும்.அழகிய கிராமம்..ஒழுங்கைகள், களிமண் ,”கிறவல்” “ரோட்டுகள் ” பூவரச மரங்கள்,கிடுகு,பனை ஓலை வேலிகள்,ஊரின் நடுவில்,ஒரு பிள்ளையார் கோவிலோ.முருகன் கோவிலோ,அல்லது அம்மன் கோவிலோ..,பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடம்,இரண்டு ரோட்டுகள் தள்ளி தலைமை வாத்தியார் வீடு,ஒழுங்கை முடிவில் ஊர் போடியாரின் கல்வீடு, காணி,பூமி,காசுபணம்,
என்று நல்ல வசதி, பிள்ளைகளை டவுனுக்கு அனுப்பி பெரிய பள்ளிகூடத்தில் படிபிக்கிறார்.”போஸ் மாஸ்டர்”தருமராசா, ,”கிளாக்கர்”தட்சணாமூர்த்தி “பியோன்” கந்தசாமி,வண்டிக்கார சண்முகம்,கடைக்கார தெய்வநாயகம்,பூசாரி கிருஷ்ணன்,காத்தான்,மூத்தான்,
கனகம்மா,இராசம்மா ..இப்படி ஊரில் உள்ள எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும்.போடியார் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கைம் பெண் தனிமையில் அப்பம்,பிட்டு விற்று பொழைப்பு நடத்துறாள்.போடியார் இவளிடம் ரகசியமாக ஊர் அடங்கியபின் சென்று வருவார்.ஊரவருக்கு தெரியும் அவர் அப்பம் சாப்பிட அவளிடம் செல்வதில்லைஎன்று.இதுதான் ஊர் வாழ்க்கை.ஊர் என்பது ஒரு பெரிய குடும்பமாக இருந்தது.கோவில் திருவிழாக்கள்,கல்யாணவீடுகள்,கூத்து,கும்மி,கோலாட்டம் என்று ஒரே கொண்டாட்டம்,அது ஒரு கனாக்காலம்.

பின்பு நகர்புற வாழ்க்கையில் பல மாறுதல்கள்.பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டன.தனிக்குடித்தனத்தில் ரமேசுக்கும்,மாலதிக்கும்
பிரச்சினை வந்து அது டைவஸ் வரைக்கும் சென்றதாம்.பின்பு பிரிந்து வெவ்வேறு திசையில் அவர்கள்.பல விஷயங்கள் பலருக்கும் மறைக்கப்பட்டன அன்று.

ஆனால் இன்றை இந்த கணினி உலகில் எல்லாமே பகிரங்கப் படுத்தப்படுகிறது.நகர்புற அந்தரங்க வாழ்வு மறுபடியும் கிராமப்புற வாழ்க்கைக்கு மாறிவிட்டது.மாற்றியது யாரு?
வாழ்க்கையில் இனி தனிப்பட்ட ரகசியங்கள் எதுவும் இல்லை என்று வரம் தந்தவர் எங்கள் “கூகிள்” கடவுள்.அவருக்கு தெரியாத விடயம் ஒன்றுமில்லை.எல்லாமே விரல் நுனியில் வைத்திருக்கிறார்.யாழ்ப்பாணத்து கூழ் எப்படி காச்சுவது என்று கேட்டால் உடனே பதில் கிடைக்கும்,மட்டக்களப்பு இறால் குழம்பு எப்படி வைப்பது என்றால் உடனே சொல்லுவார்.
காலையில் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு போன சுரேசின் மோட்டர் சைக்கில் நாலுமைல் தள்ளி இருக்கும் சுலோசனா வீட்டில் நிற்கிறது என்பதை புகைப்பட ஆதாரத்துடன் மனைவிக்கு மட்டுமல்ல,உலகம் முழுவதற்குமே “கூகில்மாப்” மூலம் தெரியப்படுத்திவிடுவார் கூகிள் கடவுள்.இவர் மூலவர் என்றால்.இவரது உற்சவ மூர்த்திதான் “பேஸ் புக்” இனி நான் என்ன சொல்வது.அதுதான் உங்களுக்கு தெரியுமே..

பாரதிதாசன்

“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..”
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..”
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..”

இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் பாராதிதாசன் என்ற பெருங்கவிஞர்அவர் பிறந்து மரணித்த மாதம் இந்த ஏப்ரல் மாதம்.அதனையொட்டி இச்சிறுபதிவு மலர்கிறது.

பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘கனகசுப்புரத்தினம்’ ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், ‘பாரதிதாசன்’ என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.