“மனிதர்கள் வந்தார்கள்” (சிறுகதை) .            சபா தயாபரன்     

அந்த  பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இல்லை . சுமார் இருபத்தைந்து பேராவது  இருக்க வேண்டும். பல இருக்கைகள் வெறுமையாக கிடந்தன . அங்கிருந்தவர்களின் சந்தோசமான  பேச்சிலும் சிரிப்பிலும் இருந்து  அவர்களுக்கு  அந்த விடயம்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.  தெரிந்திருந்தால் அவர்களின்  சிரிப்பும்  சிந்தனையும்   சிதறடிக்கப்பட்டு பயம் ஓன்று தோன்றியிருக்கும் .இந்த கலகலப்பு அவர்களிடம் இருந்து   தொலைந்து போய் இருக்கும் .

செல்வன் வந்து  இவனை தனியாக கூப்பிட்டே அந்த விடயத்தை   சொன்னான்

“எத்தனை ராணுவம்  செத்தது என்று தெரியவில்லை.ஆனா சேதம் கூடத்தான் . கொஞ்சம்  கவனமாக இரு” ஒரு பயணம் போகும்  நேரத்தில் செல்வன் இதைச்  சொல்லி  குழப்பி இருக்கக் கூடாது என்று தோன்றியது.  .

அந்த பஸ்ஸில் திலகாவும்  இன்னும் இரண்டு பேரும்   தான் பெண்கள் . தாயும் மகளும் போல இவர்கள் இருந்த அந்த இரண்டு பேரும்  இவர்கள்    இருந்த சீட்டுக்கு முன்னாலே  அமர்ந்திருந்தனர்.

அன்றைக்கு  நெஞ்சு வலி வந்தபோது பக்கத்தில் நின்ற  திலகா      ஒரே பிடியில் நின்று விட்டாள்  டொக்டரிட்ட போகவேணும் என்று.டொக்டரிடம்   அவளும்  வந்தபடியால்தான் இவன் வருத்தம் அவளுக்கும் தெரிய வந்தது.

கொழும்பில போய்  கார்டியோலோஜியிடம்  ஒருதரம் செக் பண்ணுங்க’  என்று டாக்டர் சொன்னபோது  திலகாவின் கண் கலங்கி விட்டது.

நீங்க தனியா போகவேணாம் கொழும்புக்கு  நானும் வாறன் ”

“ஊர் இருக்கிற நிலைமையில நீ வர வேணாம்” .

ஆனால் திலகா  சம்மதிக்கவில்லை..  அவள் பிடிவாதக்காரி . அவளோடு ஒத்துப் போவதே சரி  என்றாலும் அவள் வருவது இவனுக்கும்  ஆறுதலாக இருக்கும் என்பதால் சம்மதித்தான் .

அரசாங்க   பஸ் தனியார் பஸ் போல வசதிகள் குறைவு. இடுப்பு கால்கள் கழுத்து என்று எல்லாவற்றையுமே ஒட்டுமொத்தமாக ஒரு கை பார்த்து  வலியைக் கொடுத்து  பாடாய்படுத்தி விடும்.. திலகா  தனியார் பஸ்சில் போகாததிற்கு இரண்டு காரணம் மட்டுமே என்பது இவனுக்கு தெரிந்திருந்தது . திலகாவிற்கு ஏசி பிடிக்காது அத்துடன் தனியார் பஸ் டிரைவர்கள் வேகமாக மற்ற பஸ்ஸோடு போட்டிக்கு ஓடுவாங்கள். இதுதான் திலகா அரசாங்க பஸ் பிரயாணத்தை விரும்பக்  காரணம்.

டிரைவர் பஸ்ஸை   ஸ்டார்ட் பண்ணினார் .உடன் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை.

‘ நான் நினைச்சன்” திலகா தனக்குள்ளே பேசியபடி இவனை பார்த்தாள். அவள் பார்வதி அக்காவுக்குத்தான் ஏசுகிறாள் என்று  இவனுக்கு விளங்கியது. கேற்றை விட்டு வெளியே  வந்தபோது  பார்வதியக்கா   முகத்தில் விழிச்சது  வேறு விஷயம்

“எங்க  புள்ள தூரமா’ என்று வேறு கேட்டுத்  தொலைத்து  விட்டா. இந்த கிழவிக்கு நான் எங்க  போனா என்ன என்று    பஸ் ஸ்டான்ட் வரும்வரைக்கும் திலகா ஏசி வந்தாள் .

ஒருபடியாக பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி விட்டார் டிரைவர் . முன் சீற்றில் இருந்த தாயிடமும் மகளிடமும் திலகா பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.  வழமையான விசாரிப்புகள் . அறிமுகத்தில் தொடங்கி முடிவில் ஒரு நெருக்கமான ஒரு பிணைப்பு அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்தது.

கண்ணாடி ஜன்னலினூடாக வெளியே சிவப்பாகத்  தெரிந்த வானத்தை   மெல்ல இருட்டு உள்வாங்கிக் கொண்டிருந்தது  கறுப்பாக பறந்த  சில பறவைகள் பஸ்ஸோடு போட்டி போட்டுக் கொண்டு   ஓடிக் களைத்து முடியாமல் பின்வாங்கியபடி  மறைந்து போயின .குளிர் காற்று  உடம்பைத் தழுவி குளிர் வித்துச் சென்றது  பஸ் ஜன்னல் கண்ணாடியை மூடினான்.

இராணுவத் தரிப்பிடங்களில் சோதனை  எல்லாம் முடிவடைந்து விட்டது.  அநேகமாக பஸ்சில் எல்லோரும் நிம்மதியுடன்  நல்ல நித்திரையில் மூழ்கி இருந்தனர்  இவனுக்கு நித்திரை வரவில்லை திலகா இவன் தோளில் சாய்ந்தபடி  நித்திரை கொண்டாள்.அந்த இருக்கை அவளுக்கு அசௌகரியமாகவே இருந்தது . என்றாலும் ஓரளவு சமாளிக்கிறாள் .  டிரைவருக்கு முன்னால்  இருந்த லைட்டு மட்டும் எரிந்து கொண்டிருந்தது

பஸ் இரவுச் சாப்பாட்டுக்காக  பஸ் ட்ரைவருக்கு  தெரிந்த ஹோட்டலில் நின்றது

இவன் பஸ்ஸிலிருந்து இறங்கினான். ஒரு பிளேன்  டீயை வாங்கி  குடித்தான். வெளியே வீசிய குளிர் காத்துக்கு பிளேன்  டீயின் மெல்லிய சூடு  தொண்டைக்குள் இறங்கையில்   இதமாக  இருந்தது. .

இவன் கையை ஒரு குளிர்ந்த மெல்லிய  கை  தொட்டது. அப்துல்லா ஹாஜியார்  முதியோர் சங்க தலைவர்.

“ஹாஜியார் எப்படி இருக்கிறீங்க “.. வாஞ்சையுடன் .அவரின் தோளில் கைவைத்தபடி கேட்டான்.

“அல் ஹம்துலில்லா. நல்ல சுகம் சேர்  உங்கள பஸ்ஸில  கண்டிட்டன்  .பிறகு கதைக்கலாமெண்டு  இருந்தன் .

ஹாஜியார் இவனிடம் சற்று  நெருக்கமாகி வந்தார்

“சேர் கேள்விப்பட்டிடீங்களா குண்டு வெடித்தது”

“ஓம் ஹாஜியார்”

” கவனம்  சேர்.’அவரின் குரலில் ஒரு அக்கறை தொனித்தது

பஸ் மீண்டும் ஓடத்தொடங்கியது . ஒருவர் பஸ்ஸினுள்  ஏறினார்.  நல்ல போதையில்  இருந்தார் “ஓக்கம தேமலு  கட்டியத..?” (எல்லாரும் தமிழாக்களா) என்று சிங்களத்தில் கேட்டார்.   கண்டக்ரர் பதில் சொல்லவில்லை. மாத்தையா கொகித யன்னே  ( ஐயா நீங்க  எங்க போறீங்க) கொண்டக்டர் அவரிடம்  சிங்களத்தில்   கேட்டார்

எனக்கு டிக்கட் வேணாம். முன்  சந்தியில் நிப்பாட்டுங்க  என்ற்று சிங்களத்தில் கூறியபடி  50 ரூபா தாள்  ஒன்றை   கண்டக்டரின் கையில்  கொடுத்து விட்டு அடுத்த பஸ் ஹோல்டில் இறங்கிச் சென்றார்.

 

இவனுக்கோ    எல்லாம் தமிழா என்று கேட்டது மனசை உறுத்தியது. ஹாஜியார் இருந்திருந்த  சீற்றில் இருந்து  இவனை ஒரு கேள்விக் குறியோடு  திரும்பிப் பார்த்தார்.

குண்டு வெடித்தது….. பஸ்ஸில் இடையில் ஏறியவன்   தமிழா  என்று   கேட்டது …….எல்லாவற்றையும் மனசு ஒன்றோடொன்று  சம்பந்தப் படுத்தி கற்பனைக்   குதிரையை  மிக வேகமாக  தட்டி   என்னென்னவோ எல்லாம் மனசில் புகுந்து யோசிக்க வைத்தது. பஸ்சின் வேகம் கூடியது. இருட்டில் எந்த இடம் என்று தெரியவில்லை.  இருட்டை  கிழித்தபடி பஸ்  வேகமாக    ஓடிக் கொண்டிருந்தது .

இப்போதே இடுப்பு வேறு வலி எடுக்கத் தொடங்கி விட்டது. திலகா சீற்றில்  திரும்பி திரும்பி படுத்தாள்  நித்திரை கொள்ள ஒழுங்கான நிலை அவளுக்கு இல்லை என்று விளங்கியது.பாவம் அவள் . இவன் கையை அவள் தலைக்கும்   பஸ்   கண்ணாடிக்கும் இடையில் வைத்து  அவள் தலை கண்ணாடியில்   அடிபடாமல் இருக்க வைத்துக்   கொண்டான்..

திடீரென்று அது நடந்தது .

படார் என்று ஒரு  பெரிய குண்டு வெடித்ததைப்போல  சத்தம்  பஸ்ஸைக் குலுக்கியது. அப்படி ஒரு பெரிய சத்தம் . பஸ் நிலை தடுமாறியது. இவனுக்கு உடம்பு உதறியது . அந்த பெரிய சத்தம்  திலகாவை  மட்டுமல்ல  பஸ்ஸில் இருந்த  எல்லோரையும் எழுப்பிவிட்டது.   சமநிலை தளர்ந்த  பஸ்  ஒருவாறு குலுங்கி மெதுவாக ஒரு  இடத்தில்  நின்றது.  எல்லாரின்  முகத்திலும் கலவரத்தின் ரேகைகள்.  என்ன நடந்தது என்று அறியாமல்  எல்லோரும் பயத்தினால் உறைந்து  பலவித வினாக்களோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கண்டக்டர் இறங்கி கீழே பார்த்து விட்டு வந்து சொன்னார் .

‘பஸ்ஸிட டயர் வெடிச்சிற்று எல்லோரும் கீழே இறங்குங்க” .அந்த பெண்ணும் தாயும் இவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் மனதில் பயமும் பீதியும் ….ஒருவருக்கொருவர பேச முடியாத மனநிலை.

ஹாஜியார் இவனை நோக்கி வந்தார்.

“சேர்   என்ன இப்படி வந்து சிக்கிக் கொண்டம். இங்க தமிழ் பேசுற ஆட்களே இல்ல . இத எப்ப திருத்தி…. எப்ப போகப் போறமோ

ரைவருக்கும்   கண்டக்டருக்கும் பஸ் டயரை எப்படி மாத்துவது என்பதில் வாக்குமூலம் வந்தது . கஷடப்பட்டு முயற்சித்தும்   டயரை பொருத்தி சரியாக்கும் நிலையில் அவர்கள் இல்லை.

“அம்மனோ அப்பனோ ஆப்ப கண்ட சல்லி நோ….. (அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல அப்பம் சாப்பிட காசும் இல்ல) தூரத்தில் ஒரு கட்டை சிங்களக் குரலில் ஒரு  பாட்டும் சேர்ந்து கும்பலாக சிரிக்கும் சத்தமும் கேட்டது.

எல்லோரும் ஒரு வித பதட்டத்தில்…..

அந்த இளம் பெண்   பருந்தை கண்டு பயத்தில் ஒரு பாதுகாப்பு தேடும்  குஞ்சு   தாய்க் கோழியிடம் அடைக்கலம் தேடுவது  போல  திலகாவோடு நெருங்கினாள்  ….அவளோடு சேர்த்து அவள் தாயும் .

தெருவோரம் இருந்த மங்கலான தெருவோர போஸ்ட்  வெளிச்சத்தில் ஒரு கும்பலே வந்து கொண்டிருந்தது தெரிந்தது . கையில் சாராய போத்தல்கள் எல்லோரும் நல்ல போதையில்  இருந்தார்கள்..  பஸ்ஸை கணடதும்  பாட்டுச் சத்தம் நின்றது.

வந்த கும்பல்  ‘எல்லோரும் தமிழ்  என்று சிங்களத்தில் சிரித்து அவர்களுக்குள்ளே பேசிக்  கொண்டது இவனுக்கு புரிந்தது  வரும்போது  இடையில் ஏறி இடையில் இறங்கிய அந்த குடித்திருந்தவன் கேட்ட அதே கேள்வி …. ஏன் தமிழனென்டால்  என்ன  விசித்திர படைப்பா…? அதே கேள்வி… அதே போதை… அப்படி என்றால் இவர்களுக்கும் அவனுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ….? உளவு பார்க்கவா அவன் அப்போது  அனுப்பி வைக்கப் பட்டான்…..  மூளை பலப் பல கோணங்களில்     மாறி மாறி யோசித்தது. கற்பனைக்குத்தான் கட்டுப்பாடு இல்லையே. இனி   தப்பி ஓடவும் வழி இல்லை ஓடவும் முடியாது .  முன்பின் தெரியாத இடம். இருட்டு வேறு. தனியாக  என்றாலும் பரவாயில்லை. கூடவே  திலகா.போதாக்குறைக்கு  தனியா வந்து மாட்டிக் கொண்ட அந்த இளம் தாயும் மகளும்.

இனி தப்பிக்க வழி இல்லை . நடப்பது நடக்கட்டும் எப்படியும் வருவதற்கு முகம் கொடுப்போம்  தனக்குள்ளே இவன் பேசிக் கொண்டான் .

“என்ன நடந்தது …….சிங்களத்தில் ஒரு  முரட்டுக்   குரல் . டார்ச் லயிட் வெளிச்சத்தில்  அந்த குரலுக்குரியவன் பெரிய தாடி வைத்திருந்த ஒரு முரட்டு முகம்.இவனிடம் தான் கேட்டான்   .அவனில் இருந்து வீசிய சாராய வாடை இவனை குமட்டி எடுத்தது. வார்த்தைகள் வெளி வர மறந்தன.  ‘பஸ் டயர் வெடிச்சிற்று “தடுமாறியபடி சிங்களத்தில்  சொன்னான்.  ‘

டிரைவர் முன் வந்தார்.

“என்ன டயர் மாத்த முடியல்லியா….” என்று சிரித்தான்

டிரைவர் ஓம் என்று  தயங்கியபடியே பதில் சொன்னார்.

” மல்லி’  என்றபடி கூட வந்தவர்களில் ஒருவனைக் கூப்பிட்டான் தாடிக்காரன்.

“சுட்டாக் தெண்டகோ  மட்ட “(எனக்கு கொஞ்சம் தா)  என்று சிங்களத்தில் கேட்க அவன் ஒரு சிரட்டையில் போத்தலில் இருந்த சாராயத்தை ஊத்தி கொடுத்தான்.   அதை என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தான் . எல்லோரும் பயத்தினால் உறைந்து போய் நின்றார்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் . .எல்லோரும் எதிர்பார்த்ததையும்  விட எதிர்பாராத சம்பவம்  ஓன்று அங்கே  நடந்தது.

அந்த முரட்டு முகம் தன்  சேர்ட்டைக் கழட்டி பக்கத்தில் இருந்தவரிடம்    கொடுத்து விட்டு பஸ்ஸின் கீழே புகுந்து டயரை  மாத்தத் தொடங்கியது  கண்டு எல்லோர் முகத்திலும் ஆச்சரியம் .

. திடீரென்று ஒருத்தன் அந்த தாய்க்காரிக்கு பக்கத்தில் இருந்த மகளின் முகத்தில் டோர்ச்சை அடித்தான் . இனியும் பொறுக்க முடியாது.இவன் அந்த பெண்ணை தன்னுடன் இழுத்து அவன் முன்னே வந்து நின்றான் நடப்பது நடக்கட்டும்.

“மாத்தையா மகளா “ சிங்களத்தில் கேட்டான்.அவன் .

“ ஓம்’ ஒருவித இறுக்கத்தோடு பதிலளித்தான் இவன்.

‘அங்க நிக்க வேணாம் பக்கத்தில பாம்பு புத்து  இருக்கு தள்ளி நில்லுங்க ‘டோர்ச்சினால் அடித்து அவனே ஒரு பாதுகாப்பான  இடத்தைக் காட்டினான்.

ஒரு பதினைந்து   நிமிடம் சென்றிருக்கும் பஸ்ஸின் கீழிருந்து அந்த தாடி வைத்த முரட்டு முகத்துக்குரியவன்  வெளியே வந்தான்   . அவன் உடம்பு வியர்வையால் தொப்பமாக  நனைத்திருந்தது.  .

அவன் குடித்திருந்த சாராய  மனமும்  பஸ்ஸின் கீழே இருந்த வெக்கையில்   வியர்வையும் சேர்ந்து வயிற்றை குமக்க வைக்கும் நாத்தம் அவனிடமிருந்து .. அவனுக்காக காத்திருந்தவன் போல ஒருத்தன் சாராயம் நிரம்பிய சிரட்டையை அவனுக்கு நீட்டினான். ஒரே மூச்சில் அதைக் குடித்து விட்டு

‘டிரைவர் மாத்தையா எல்லாம் சரி. நோ ப்ரோப்லேம் ‘கர  கரத்த குரலில் சொன்னான்  .

‘மாத்தையா ஒரு பிரச்சினையும் இல்ல . டயர் மாத்தியாச்சு நோனா மாத்தையா    அம்மா  துவ பஸ்ஸில் ஏறச் சொல்லுங்க மழை வாராப் போல இருக்கு  “

இவன் மௌனமானான் . தாங்க்ஸ் சொல்வதற்கு கூட வார்த்தைகள் வெளி  வர மறுத்தன.திக்கித்து நின்றான்  . என்ன நடந்தது  இங்கே ?

“இதை வச்சுக்க கொள்ளுங்க”  100 ரூபாத் தாளை டிரைவர் அவனிடம் நீட்டினார்

இதுவரை அமைதியான தொனியில் பேசிக்  கொண்டிருந்த அந்த முரட்டு முகத்துக்குரியவனுக்கு  எப்படித்தான் அப்படி கோபம் வந்ததோ தெரியவில்லை.

“சல்லி….. எதுக்கு….. எவ்வளவு சல்லி உனக்கு வேணும் .. பைத்தியக்காரா  கொச்சைத் தமிழில் கத்தினான் பலயங் ஒய்”  என்றவாறு ரைவரை  நோக்கி  அடிக்கிறமாதிரி போனான்.

டிரைவர் பயத்தில் ஓடிப் போய் தன்  ரைவர் சீற்றில் இருந்து கொண்டான்

இவனிடம் வந்தான் .

” மாத்தையா  மனுசனுக்கு மனிசன் உதவி செய்றதுதான் மனிசத்தன்ம… எப்பவோ சாகப் போற உடம்பு . அதுக்கிடையில நம்மளால  முடிந்த உதவியைச் செய்றதானே.  அத இப்படி காசக்  கொடுத்து உதவியை  கேவலப் படுத்துறது.கொந்த நா மாத்தையா. ஓகே மாத்தையா நாங்க வாறம்……கவனமாக போயிற்று வாங்க” தாடிக்காரனோடு  சேர்த்து அந்த கும்பல் புறப்பட்டது மீண்டும் பாட்டுச் சத்தத்துடன்..

இவனுக்கு கொஞ்ச  நேரம் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க  முடியாமல் இருந்தது.அவன் சொன்ன வார்த்தைகள் இவனுக்கு செருப்பால் அடித்ததை போலிருந்தது. இவனின் கற்பனை …….அவர்கள் நடந்து கொண்ட விதம் …….இத்தனை கேவலமான எண்ணம் கொண்டவனா நான் என்று இவனைப் பற்றி  இவனே சுய விமர்சனம் செய்து கொண்டான் .

‘யார் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் .’ இவன் அவர்களை பற்றி பண்ணி வைத்திருந்த  கற்பனையை  சுக்கு நூறாக உடைத்து எறிந்து… போதாக்குறைக்கு முகத்தில் அறைந்த மாதிரி ஒரு வார்த்தை…. அந்த மனிதாபிமானம்..உதவி. அந்த ஆழ்ந்த சிந்தனை . அந்த முரட்டு உள்ளத்திலிருந்து வெளி வந்ததே…மோதி உதைத்து   விடு பாப்பா  அவர் முகத்தில் உமிழ்ந்து விடு… அந்த முகமே இவனுடையதாக    மாறி  பாரதியின் பாட்டுக்கு உருக்கொடுத்த ஒரு கதாநாயகனாக   அந்த தாடிக்காரன்.  அந்த முரட்டு முகத்துக்குள்ளிருந்த அந்த உயர்ந்த  மனிதம்.

.தெருவில் வந்த  ஒரு காரின் மஞ்சள்  வெளிச்சத்தில் அவர்கள்  விண்ணில் இருந்து வந்த தேவதூதர்கள் போல பொன்னிறமாக தெரிந்தார்கள் . யாரிவர்கள்..? உண்மையில் விண்ணிலிருந்து  வந்த  தேவர்களா….. இல்லையில்லை அவர்கள் மனிதர்கள். ஆம்  மனிதர்கள்தான் வந்தார்கள் .

VIRAKESARI.

 

 

 

 

.