பண்டா அய்யா (சிறுகதை) – சபா சபேஷன்.

பதினொரு மணியின் அக்கினி வெக்கையில் கொழும்பு புறக்கோட்டையின் ஒல்கொட் மாவத்தை.

தொலைத்துவிட்ட அல்லது ஏதோ ஒன்றிற்கான தேடல் பரபரப்பில் அந்த பெருவீதி மனிதத் தலைகளால் நிரம்பியிருந்தது.அங்கு திரிகின்ற ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை என்னென்ன தேவைகளோ? அவதிகளுக்குள்ளும் அவற்றை நிறைவேற்றிக் கொள்கின்ற அவசர அலைச்சல்கள்…ஓட்டங்கள்;. வான்முட்ட முளைத்த தொடர்மாடிக் கட்டிடங்களின் கீழமைந்த கடைகள். குறுக்கு வீதிகள். காரணமில்லாமலேயே அந்த வீதிகளில் இடப்பட்டிருந்த இரும்புக் கம்பித் தடைகள். தொடராக வந்து நிற்பதும் செல்வதுமாக இருந்த பஸ்களின் ஆக்கிரமிப்பு. ஒருவித படபடப்புடன் ஹோனை அழுத்தி அழுத்தி வாடிக்கையாளர் வேட்டை நடாத்துகின்ற ஓட்டோக்கள்.இவற்றிற்கிடையில் புகுந்து புழுவாய் நெளிந்தோடுகின்ற மோட்டார் பைக்குகள்.வான்மேகங்களை மட்டுமல்ல நட்சத்திரங்களையே கொண்டு வந்து இறக்கியுள்ளோம் மலிவாய் பெற்றுக்கொள்ளுங்கள் எனும் மாயத்தோரணையில் நடைபாதை அங்காடி விற்பன்னர்கள்.கோடீஸ்வர இலட்சாதிபதிக் கனவுகளை கண்முன்னே நிகழ்த்தி விடுவதுபோல ஓலமிட்டுக் கொண்டிருக்கின்ற லொத்தர் வியாபாரிகள்.புகையும் புழுதியும் கலந்த வாடையை உள்வாங்கிக்கொண்டே பெருநகரம் தனது நவீனத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

பொரல்ல ஊடாக நாரஹேன்பிட்டிக்குச் செல்லும் 103 ம் இலக்க தனியார் பஸ்ஸின் புட்போட்டில் நின்றிருந்தான் பண்டா.கறுத்தநிற மெலிந்த உடம்பு. முகத்தில் தோண்டி எடுத்துவிட்டதைப் போன்ற குழிவிழுந்த கன்னங்கள்.நேற்றைய இரவின் போதையை சொல்லிக்காட்டுகின்ற சிவந்திருந்த கண்கள்.பின்னால் திருப்பிவிடப்பட்ட கறுத்த தொப்பி.சிவப்பும் வெள்ளையும் கலந்த கோடிட்ட ரீசேட்..நீல நீறத்தில் நீண்ட ஜம்பர்.தேய்ந்து போயிருந்த பாட்டா செருப்பு. .இடதுகையின் நடுவிரலில் மடித்து சொருகியிருந்த சில நோட்டுகள்.மறுகையில் பொத்தியபடி வெளியில் தெரியாமல் அடிக்கடி பற்றவைக்கின்ற சிகரெட்.இளம்பருவத்தை எரித்து வயோதிபத்தை காட்டி நிற்கின்ற பண்டா எல்லோருக்கும் பண்டா அய்யா.

”ஆ.. பொல்ல.. நார்ரயிட்ட… பொல்ல.. நார்ரயிட்ட ” பொரல்லைக்கும் நாரஹேன்பிட்டிக்கும் பண்டா இட்ட அவசரப்பெயர்கள் இவை.

”ஆ.. பொல்ல.. நார்ரயிட்ட… பொல்ல.. நார்ரயிட்ட” பண்டா தன்னால் முடிந்த மட்டும் கத்திக் கொண்டிருந்தான்.அவனைப் போல அநேகமான பஸ் கண்டக்டர்கள்..தனியார் பஸ் கோளயாக்களும் ஓட்டோ சாரதிகளும் பயணிகளை கூவி கூவி அழைத்துக் கொண்டிருந்தனர்.ஓரளவு பயணிகள் பண்டாவின் பஸ்ஸில் ஏறியிருந்தனர்… ”.ஹறி… ஹர்ர்றீய்” பஸ்சாரதிக்கான சமிக்ஞை பண்டாவிடமிருந்த எழ பஸ் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கணிசமான அளவு பயணிகளை ஏற்றும் தன்முயற்சியில் மனந்தளராத விக்ரமாதித்தனாய் பண்டா மீண்டும் மீண்டும் கூவிக்கொண்டேயிருந்தான்.

எதிர்பார்ப்புகள் மட்டுமல்ல ஏமாற்றங்களுமே அற்ற அன்றாட வாழ்க்கையில் தனிஒருவனாகவே நிற்கின்ற பண்டா.கொழும்பு புறநகர் சேரிக்குடியிருப்புக்களின் நெருக்கமான சிற்றொழுங்கை ஒன்றில் பலகையிலான வீட்டில்தான் அவன் குடியிருக்கிறான்.உறவென்று சொல்லிக்கொள்ள தன்னுடன் யாருமில்லாத தனிமையான வாழ்க்கையில் எங்கிருந்தோ வந்து அவனுடன் ஒட்டிக்கொண்ட பத்மாவதிக்கிழவி.வயது எழுபத்ததைந்து தாண்டிநிற்கின்ற மெல்லிய உடம்பு.இளமையின் சுகிப்புக்கள் வனப்பான தருணங்கள் என்பன அவனது வாழ்க்கையில் இல்லை.சில சமயங்களில் புறக்கோட்டையின் நண்பர்கள் குழாமுடன் சேர்ந்து அளவுக்கதிகமாக குடிக்கின்ற நேரங்களில் சில வடிகால்களைத் தேடிச்செல்வான் பண்டா.இனிமை சிலிர்த்து அவிழும் அந்த கணநேரங்கள் அவனது இளமைப்பருவத்தின் எரியுண்ட பக்கங்களை கோடிட்டுக் காட்டி நிற்கும். அவனைப் பொறுத்தவரை ஒழுக்கம் காதல் என்பன அர்த்தமற்று காலாவதியாகி அந்நியப்பட்டுவிட்டதை உணரமுடியாத ஒரு வெற்று வாழ்க்கையையே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அந்த வாழ்க்கையின் இன்னொரு பக்கம் வேறோரு வடிவில் அவனைச் சூழ்ந்திருந்தது.எந்த ஒரு குடும்ப நிகழ்வுகளிலும் தானாக வலிந்து சென்று ஒட்டுறவாடி அன்றைய தொழிலுக்கே செல்லாமல் வேலைகளை முன்னின்று செய்து முடிக்கின்ற பண்டா அந்தச் சேரியில் ஒரு தெரிவுசெய்யப்படாத மக்கள் பிரதிநிதி. தங்களது குடும்பத்தில் ஒருவனாhகவே அவனை நினைத்து அன்பைக் கொட்டும் அந்த சேரிக்குடியிருப்புச் சனங்கள். உறவுகள் என்ற சொல்லிக்கொள்ளும் பாசப்பிணைப்புக்கள் அவனுக்கில்லாதபேர்தும் அவர்களின் நெருக்கமான பொய்களற்ற நிதர்சனமான கரிசனையில் அவன் கரைந்தே போயிருந்தான்.அவனிடம் செலவுக்கு கைமாறும் சிலர்..பள்ளி மாணவர்கள் பலருக்கு தானாகவே கொப்பி பென்சில் இவைகளை வாங்கிக் கொடுப்பான் பண்டா.
‘நான்தான் படிக்கல்ல…நீங்களாவது படியுங்க மக்காள்’ என்று உள்ளுர நினைத்துக்கொள்கிறானா அவன்.?

ஓவ்வொருநாளும் வேலை முடிந்து வீடுசெல்லும்போதே அரைப்போத்தல் சாராயமும் இரண்டு கொத்துரொட்டியும் அவன் கையில் இருக்கும்.நாள்முழுக்க பஸ்ஸில் ஓடித்திரிந்த அசதிஇ உடம்பை வாட்டி எடுக்கும்.தினமும் இரவில் மது அருந்தாமல் அவன் உறங்கியதே யில்லை.கொத்துரொட்டியில் ஒன்று பத்மாக்கிழவிக்கு. பத்மா அம்மா என்றவாறே வீட்டினுள் நுழைந்த பண்டாவை கிழவி வெறுப்புடன் திட்டுவது வாடிக்கையான விடயமாகிப் போய்விட்டது.
‘ ஒரு நாளைக்கெண்டாலும் குடியாம தூங்க ஏலாதாடா மனே..டொக்ரர் சொன்னது ஞாபகம் இருக்கா..குடிச்சிக் குடிச்சி ஈரல் எலுவா கெட்டுக்கிடக்குது.ஏன்டாப்பா உனக்கிந்தக்கோலம்…” பத்மாக்கிழவி அழுத குரலில் பேசினாள்.தனக்கான வாழ்வாதாரமே பண்டாவின் உழைப்பு என்பது அவள் அறியாததல்ல. அதனால் அவன்மீது பத்மாக்கிழவி காட்டுவது உண்மையான அக்கறையாகவும் அன்றி தனது சீவியத்திற்கான முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
இதனை தெரிந்து கொண்டா பண்டா பேசுகிறான். ‘அம்மா எனக்கெண்டு என்னம்மா இருக்கு..என்ன பெத்தவளும் பொயிற்றா .அப்பாவோட சின்ன வயதில கொழும்புக்கு வந்த நான்…வருத்தம் வந்து ஆஸ்பத்திரியில செத்துக்கிடந்தவரயே நான் போய்ப்பாக்கல்ல..பாத்து நான் என்ன செய்யுற..அந்த நேரம் எனக்கிட்ட என்ன காசா இருந்திச்சி சாச்செலவுக்கு’ தனது புத்திரக்கடமைகள் இன்றியே அநாதரவாக ஆஸ்பத்திரியில் இறந்துபோன அப்பாவை நினைத்துக் கொண்டான் பண்டா.

வரும்போதே பாரில் அடித்திருந்த ஒரு பெக் அவனை தொடர்ந்து பேச வைத்தது. ‘ நீ ஆரெண்டே எனக்குத் தெரியா…என்னோட வந்து சேர்ந்திருக்கா…மெசின் ஓடுற வரைக்கும் ஓடட்டும்..நல்லா உழைக்கிறன்.. நல்லா சாப்பிட்டு வாழ்ந்திற்றுப் போவமம்மா..போற நேரம் வந்தா போய்ச்சேரவேண்டியதுதான். நடப்பது நடக்கட்டும்.’ தனது தத்துவார்த்தத்தை ஒருவழியாக முடித்து வைத்தான் பண்டா.

வாழ்வின் உச்சங்களைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரணமனிதனல்ல அவன்.அன்றைக்கு உழைத்து அன்றைக்கே சாப்பிட்டு வாழுகின்ற அன்றாடங்காய்ச்சியாகவும்கூட அவன் இல்லை. தேவைகளுக்கு என்று எதுவுமே இட்டுவைத்திருக்கமுடியாத எமது சமூகப்பெரும்பான்மையினருள் அவனைச் சேர்க்கவும் முடியாது.அவனது மாதவருமானம் எவ்வளவாக இருக்கும் என்ற கணிப்பீட்டில் அவன் ஈடுபட்டதில்லை.நாட்சம்பளம்கூட சில வேளைகளில் இரண்டு நாட்கள் பிந்தியும் கிடைக்கும்.அவன் சமாளித்துக்கொள்வான்.

அதிகாலை ஐந்து மணிக்கே நித்திரைவிட்டெழும்பி வேலைக்குப் போய்விடுகிறான் பண்டா..இரவாகி வீடுவரும்வரை அவனது அன்றாட நடவடிக்கைகள்பற்றி பத்மா கிழவிக்கு எதுவுமே தெரிந்திருக்க நியாயமில்லை.

ஓடிக்கொண்டிருந்த பஸ் மருதானை சந்திக்கருகில் நிறுத்தப்பட்டுவிட்டது.தேர்தல் காலமென்றபடியால் எங்கோ நடக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒருவழிப்பாதையால் நிறைய வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன.புட்போர்ட்டில் நின்றிருந்த பண்டா கீழே இறங்கி நின்று ஒரு சிகரெற்றைப் பற்ற வைத்து எங்கோ வெறித்தபடி பார்த்துக் கொணN;ட பஸ்ஸின் புட்போர்ட்டில் இ;ருந்து கொண்டான்.சிகரெற் புகைகள் காற்றில் கலைந்தபடி போக அவன் மனமும் அவற்றுடன் சேர்ந்து கலைந்து போனது.

தெற்கின் பிரதேசப்பகுதிகளைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமம் அவனுடையது.சமூக அவலங்களின் பரீட்சார்த்தக் களங்களாகவே ஆகிவிட்ட அடிமட்ட குடும்ப பொருளாதாரத்தினை தாங்கி நிற்கின்ற இலங்கைப்பிரஜைகள் கொண்ட சிற்றூர் அது. எந்தவித அடிப்டை வசதிகளுமற்று ஊரின் ஒதுக்குப்புறத்தில் மண்ணாலான குடிசைவீடுதான் பண்டா குடும்பத்தின் வசந்தமாளிகை. அவர்களின் ஒரே வாழ்வாதாரமான அப்பாவின் சில்லறைக்கடை சற்றுத் தூரத்தில் வீதியோரம் ஒரு சின்ன குடிசையில் இருந்தது. படிப்பதற்கென்றே பிறந்தவன்போல் சாதாரணதரத்தில் படித்துக்கொண்டிருந்த பண்டாவின் அண்ணன.; அம்மா அவிக்கின்ற பிட்டு இடியப்பம் இவைகளை தூர உள்ள பாடசாலைக்குப் போகும்போதே அப்பாவின் கடைக்குச் சென்று கொடுத்துவிட்டு செல்வதே அவன் வழக்கம்.இதற்காக அவனுடன் படிக்கும் மாணவர்கள் அவனுக்கு வைத்த பட்டம் ‘இடியப்பப் பெட்டி’ .நண்பர்கள் அவனைக் கேலி பண்ணும்போது கூடச் செல்லும் பண்டாவுக்கு கோபம் கோபமாக வரும்.அவர்களுடன் சண்டைக்கு கிளம்பும் அவனை அடக்கி கூட்டிச்செல்வான் அண்ணன்.வழி நெடுகிலும் அவர்களைத் திட்டிக் கொண்டே வருவான் பண்டா.

இந்த அவமானங்களையும் தாங்கிக்கொண்டே தானும் படித்து தம்பியையும் படிக்க வைக்கவேண்டுமென்ற கனவு அண்ணனுடையது. அவனை பண்டாவுக்கு மிகவும் பிடிக்கும்.ஓரு விடயத்தில் மட்டும் அண்ணனுடன் அவனுக்கு ஒத்துப்போவதில்லை.விடாமல் படி படி என்று நச்சரித்துக் கொண்டே இருக்கும் அண்ணனுக்கும் பத்து வயதிலேயே பாடசாலைக்கு கள்ளமடிக்கும பண்டாவிற்கும் காலைவேளைகளில் அடிக்கடி ரெலி ட்ராமா சண்டை நடக்கும்.தாயார் விலக்குப் பிடித்து விடுவாள். கோபித்துக் கொண்டே அண்ணன் போய்விடுவான.; தங்கள் குடும்பத்தின் முன்னேற்றமே அவர்களது படிப்பில்தான் தங்கியிருப்பதாக அண்ணன் அடிக்கடி சொல்வான்.பண்டாவை அவன் வார்த்கைள் எந்த அளவிலும் பாதிக்காது. பாடசாலைக்கு போகாத அன்று அம்மாவின் திட்டுதலுடன் அப்பாவின் சில்லறைக்கடை நோக்கி சந்தோஸமாக புற்ப்படுவான் பண்டா. இன்றைக்கு கடையில் சில சுவிங்கங்கள் களவு போகும்.
‘என்ன ஸ்கூலுக்குப் போகல்லயாடா’ வாடிக்கையாளருக்கு தராசில் சீனியை நிறுத்தவாறே அப்பா கேட்டார்.

”இல்லப்பா..அங்க பாடம் நடக்குதில்ல..நேற்று ஒரே ஒரு பாடம்தான் நடந்தது.இதுக்கு மெனக்கெட்டு இவ்வளவு தூரம் கஷ்ரப்பட்டு போகணுமாப்பா..?’ யப்ப்;பா.. ஒரு மாதிரியாக விளக்கம் கொடுத்துவிட்டதாக நினைத்தான்.அப்பா விடுவதாக இல்லை
”ஏன் பாடம் நடக்கல்ல..வாத்திமார் வரல்லயா…?’
” ஸ்கூலுக்கு வாறாங்கப்பா ஆனா வகுப்புக்கு வாறதில்ல…ஒரே அந்த மீற்றிங் இந்த மீற்றிங் எண்டு….’.
‘இங்க பார்…ஸ்கூலுக்கு போக விருப்பமில்ல எண்டு சொல்லு…அதுக்காக பொய்யான சாட்டச் சொல்லாத..உன்னப்பற்றி எனக்குத் தெரியும்’
‘தெரிஞ்சா பொத்திகிட்டு இருக்கறதுதானே’ அவன் சொல்லவில்லை. மாறாக சமாளித்தான்.
‘இல்லப்பா…நாளைக்கு கட்டாயம் போவன்..’
பண்டா அப்படிச் சொன்னாலும் படிப்பு என்பது அவனைப் பொருத்வரை எலகிலேயே மிகவும் சிரமமான காரியய்களில் ஒன்றாகவே பட்டது. அது மூளையில் ஏறவேயில்லை.ஆசிரியர்மாரை எப்படியோ சரிக்கட்டிவிடும் பண்டாவிற்கு தனது அண்ணனிடமிருந்து தப்புவதே பெரும்பாடாகிப் போனது.இருந்தாலும் அண்ணன்மீது அவனுக்கு உள்ளுர அன்பு இழையோடியிருந்தது.இருவருமே பிள்ளைகள் என்பதால் படிப்பு விடயம் ஒன்றைத்தவிர இருவரும் வேறு எதற்குமே சண்டை போட்டதில்லை.அண்ணனுக்கும் இவனுக்கும் ஆறு வயது வித்தியாசம் இருந்ததனால் பண்டாவுக்கு எதிலுமே ஒரு விட்டுக்கொடுப்புடன்தான் அண்ணன் இருப்பது பண்டாவுக்குத் தெரியும்.

அண்ணனை படிக்கவைப்பதில் அந்த உயர்ச்சியில் தன் குடும்பத்தின் கனவு மாளிகைகளை கட்டிக்கொண்டிருந்தனர் பண்டாவின் அப்பாவும் அம்மாவும்.
அதுவும் ஒரு தேர்தல் காலம்.

கட்சிகளின் பிரச்சாரங்கள்.ஒலிபெருக்கிச் சத்தங்கள்.வரவேற்புத் தோரணங்கள். கையில் திருவேடு எந்தி வாக்குப் பிச்சை கேட்டுத் திரிகின்ற வேட்பாளர்கள். அவர்களின் பின்னால் திரிகின்ற இந்நாட்டின் வாக்காளக் ‘குடி’மக்கள்.

பண்டாவுpன் அப்பாவும் ஓரு கட்சிசார்ந்த வேடபாளரின் பின்னால் திரிந்தார். தங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடும்..அந்த வெற்றியில் தனது மகனின் வேலைவாய்ப்பும் கைகூடிவரும் என்ற பெருவிருப்புடனும் பண்டாவின் அப்பா தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுத் திரிந்தார்.தேர்தல் பரப்புரைகளில் தேவகுமாரர்களாக தங்களை சித்தரித்துக் கொண்டுஇ எந்த வரமானாலும் கேளுங்கள்;…வெற்றியின் பின்னர் அவை தரப்படும் என்ற மாயத்தேற்றங்களில் மயங்கி தங்கள் அன்றாட வருமானத் தொழில்களையும் மறந்து…வேட்பாளர்களை தங்கள் தோளில் சுமக்காத குறையாக தாங்கித் திரிகின்ற இலங்கையின் வாக்காளப் பெருமக்களுள் பண்டாவின் அப்பா முக்கியமானவராக தெரிந்தார்.தனது சொந்த செலவிலேயே பிரச்சார கூட்டங்கள் சிலவற்றிற்கு சோடா சப்ளை செய்தரர்.

எதிர்த் தரப்பினருடான தர்க்கங்கள்…தங்கள் கட்சியின் நிறம் சின்னம் என்ன என்பது தெரியாமலேயே தனி ஒரு மனிதனது அறிமுகத்தின் பின்னால் நின்று அவர்களது பணத்திலும் மதுப்போத்தல்களிலும் முழ்கி கிடக்கின்றவர்களுடன் அரசியல் பேச முனைகின்ற பண்டாவின் அப்பா.அதனால் ஏற்பட்ட சண்டைகள்…பொலிஸ் என்றிகள் கைதுகள் விசாரணைகள். எச்சரிக்கைகளுடான பிணைவிடுவிப்புக்கள் என்று ஊரே கொண்டாடிக் கொண்டிருந்த தேர்தல் உற்சவப் பெருவிழா நிறைவு பெற்றது.

முடிவுகள் வெளிவந்தன.பண்டாவின் அப்பா ஆதரவளித்த வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார்.அந்த மகிழ்ச்சியில்; அப்பா அன்று செலவழித்த சீனவெடிகளின் செலவு அவரது கடைவருமானத்தின் ஒரு கிழமைக்கான இலாபம்.தனது மகன் ஒரு அலுவலகத்தின் மேசையில்; ;ரை’யுடன் அமர்ந்திருந்து வேலைபார்க்கும் ற்றெயிலர் அவர் மனத்திரையில் ஓடத் தொடங்கியிருந்தது.மெயின் பிக்சர்தான் பின்னால் வரப்போகுதே.

வெற்றிக் கொண்டாட்டங்கள் யாவும் முடிவு பெற்று வேட்பாளரும் பாராளுமன்ற அமர்வுக்காக கொழும்பு நோக்கிப் தனது ரத கஜ துரக பதாதைகளுடன் புறப்பட்டுச் சென்றார்.சென்று வாருங்கள்..பதவியினை பெற்று வாருங்கள்..எங்களுக்கு வந்து அளப்பரிய சேவைகளைச் செய்யுங்கள்…எதிரிகளை வாய்மூடச்செய்வோம்.என்ற நப்பாசையில் இலங்கையின் கௌரவமிக்க சனத்தொகையினர் வழக்கம் போலவே நம்பிக்கை கொண்டிருந்தனர். எந்தத் தேர்தல் நடந்ததோ அது நன்றாகவே நடந்து முடிந்தது..ஆனால் அதன்மூலம் எது நடக்குமோ நமக்கு என்று நம்பி கால்கடுக்க.. வெயிலையும் பாராமல் கிåவில் நின்று வாக்களித்த மக்களுக்கு ஜனநாயக மாண்புகளுக்குட்பட்டு – வரலாறுகள் பொய்ப்பி;த்து விடாமல் அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்படியான சமிக்ஞைகள் எதுவுமே அந்த அங்கத்தவரின் நடவடிக்கைகளில் தென்படவில்லை. வேட்பாளராயிருந்து அங்கத்தவராக பரிணாமமடைந்தவரின் தரிசனம் கிடைப்பதே உலகில் நடக்கமுடியாத விடயங்களில் ஒன்றாகிப் போனது அவர்களுக்கு.

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும’; என்பது விவசாயிகளுக்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்ற எண்ணத்தில் தேர்தலுக்காய் கண்ணை முடிக்கொண்டு தன்பாட்டில் செலவுகள் செய்த அப்பாவின் கனவுமாளிகையில் ஆங்காங்கே சிலவெடிப்புக்கள்..அதனூடு குடும்பத்தில் எழுந்த சச்சரவுகள். சுண்டைகள். வறுமை…பசி என்பதன் கோரமுகங்கள் பண்டாவின் குடும்பத்தில் நின்று பேயாட்டம் ஆடின..அந்தச் சின்னஞ் சிறுவயதில் அழுது வடிப்பதைத்தவிர அவனால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

அண்ணனின் வேலை தேடும் படலம் ஆரம்பமாயிற்று.அப்பா எங்கெங்கோ அலைந்து திரிந்தார். கடையைக்கூட அவர் இன்னுமே திறக்கவில்லை.தனது வாழ்நாள் முழுதுமே அடுப்பு வெக்கை புகை சாம்பல் என்று கழித்த அம்மா ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டாள்.அம்மாவுக்கான வைத்திய செலவுகளுக்கே அப்பா திண்டாடிக்கொண்டிருந்தார்.வீட்டில் சமையல் இல்லாமலேயே நாட்கள் நகர்ந்தன.அப்பாவின் கடைக்கு மூடுவிழா நடந்தது தெரியாமலேயே அம்மா ஒருநாள் கண்ணை மூடிவிட்டாள்.அண்ணன் அப்பாவுடன் பராயமறியாத சிறுவன் பண்டா மூவருமே அழுது வடித்தனர்.

நாட்கள் சென்றன.தான் சார்ந்த வேட்பாளரின் வெற்றி; தனது மகனை உயரத்தில் ஏற்றி நிற்கும் என்ற நிச்சயக்கனவில் மிதந்த பண்டாவின் அப்பா தேர்தல் மூலம் பல எதிரிகளை பெற்றுக்கொண்டார். வெற்றிக்களிப்பில் ஓரு வகையான இறுமாப்பில் எதிர்த்தரப்பினரை எள்ளி நகையாடித்திரிந்த அப்பா தான் ஓர் ஏமாளியாகிவிட்டதை நினைத்து உள்ளுர ஏக்கமடைந்தார்..அடிக்கடி ஊரிலுள்ள சிலருடன் வாய்த்தர்க்கம் சண்டை என்பன ஏற்பட்டன.
அன்று பண்டாவின் அப்பா நன்றாக குடித்திருந்தார்.மனைவியின் இழப்பு அவரை அடித்துப் போட்டிருந்தது.வீட்டில் அடுப்பே எரியாத நிலையில் அப்பாவுக்கு குடிக்க எங்கிருந்து பணம் கிடைத்தது…?மூன்று பேருக்குமான சாப்பாட்டுப்பார்சலை பிரித்து அப்பா பகிர்ந்து தந்தார். அண்ணன் சாப்பிடவில்லை.கண்ணை மூடிக்கொண்டு படுக்கையில் கிடந்தான்.தூங்கவில்லை..தனக்குள் அழுதுகொண்டிருக்கிறானா அவன்.

அப்போதுதான் அந்த பிரளயம் நடந்தது.
அப்பாவின் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்டு அப்பா தள்ளாடியபடியே வெளியில் வந்தார்.கேற்றடியில் இரண்டு பேர் நின்றிருந்தனர்.அவர்களுக்கு சமீபமாக சென்றபோதுதான் அவர்களும் குடித்திருந்தது அப்பாவின் பின்னால் நின்றிருந்த பண்டாவிற்கு தெரிந்திருந்தது.
”என்ன முதலாளி…எப்பிடி…என்ன மாதிரி…”.கண்ணைத் திறக்க முடியாமலே அவர்களில் ஒருவன் பேசினான்.

‘இப்ப உங்களுக்கு என்னடா வேணும். இங்க என்னத்துக்குடா வந்தனீங்க… ‘அப்பா ஏசி முடிக்கவில்லை
”இங்க …இந்த டா புடா எண்டெல்லாம் பேசக்கூடா”மற்றவன் குறுக்கே வந்தான்.
‘நாங்க ஒரு விசயம் கேக்கோணும்…அதுக்கு மறுமொழியச் சொல்லு நாங்க போயிர்ரம்.
”என்ன..என்னடா கேக்கப்போறீங்க”பண்டாவின் அப்பாவுக்கு கடுப்பேறியது.
‘இந்தா பார்த்தியா மறபடியும் டா புடா….சரி ..சரி அத விடு..உண்ட மகன் இப்ப எந்த ஒவ்விசுல ஜி ஏ வேல பாக்கான்…அதச்சொல்லு முதல்ல..’
பண்டாவிற்கு அவர்கள் சண்டையிடப் போவது தெரிந்துவிட்டது.உள்ளே ஓடிச்சென்று அண்ணனை எழுப்பி கூட்டிக்கொண்டு வந்தான்.

‘டேய்…இங்க இருந்து போயிருங்க..நானும் குடிச்சிருக்கன்…பெரிய பிரச்சனையாகிரும்…..’
‘என்ன உங்கட எம்பி தந்த காசு இன்னும் முடியல்லப்போல…டெய்லி தண்ணியும் சாப்பாடுமா..?’
அண்ணன் வந்து சேர்ந்ததும் அவர்களைச் சமாதானப்படுத்தத் தொடங்கினான்.விழுந்து விடும் போதையில் அவர்கள் இருவரும் தள்ளாடியபடியே நின்றிருந்தனர்.

‘அண்ணன்மார்…இஞ்ச பாருங்க.. நீங்களும் குடிச்சிருக்கீங்க அப்பாவும் குடிச்சிருக்கார்..கதைகள் வளந்தா சும்மா வீண் பிரச்சனைதான் வரும்..நீங்க உங்கட பாட்டில போங்க..நான் அவர கூட்டிற்ற உள்ள போறன்.’ அப்பாவை கைத்தாங்கலாய்ப் பிடித்தான் அண்ணன்.
வுந்தவர்களில் ஒருவன் உளறினான்.”வந்திற்றார்ரா… ஜிஏ . எந்த ஒவ்விசில வேல பாக்குறா தம்பி..நல்ல வேலயா.?.சம்பளம் எவ்வளவு?” அவனை எட்டி உதைக்கலாம் போலிருந்தது பண்டாவிற்கு.

அண்ணனுக்கும் கோபம் வந்நது.
நான் ஒரு ஒவ்விசுலயும் வேல செய்யல்ல…எனக்கு வேலயும் கெடைக்கல்ல…நீங்க போங்க..போங்கடாப்பா
” என்ன வேல கிடைக்கல்லியா….அப்படி இருக்கப்படாதே..உண்ட அப்பன்தானே சொன்னான்…எங்கட எம்பி வெண்டா எண்ட மகனுக்கு கவர்மென்ற்ல வேல எடுப்பண்டா எண்டு…என்ன கெடைக்கல்லையா’ .உரிந்து கொண்டிருக்கும் சாறனை தூக்கிப்பிடித்தவாறே பேசினான் அவன்.

அப்பா கையை ஓங்கியபடி அவன் முன்னால் வந்து நின்றார். ‘டேய்.!நக்கப் பொறக்கிகளா…சொந்தமா ஒரு வருமானமில்லஅங்க இங்க எண்டு ஏமாத்தி திரியுற நாய்கள்…உங்களுக்கென்னடா என்ர புள்ளைக்கிட்ட கத..இவடத்த விட்டுப் போயிருங்க இல்லாட்டி நடக்கிறது வேற’
என்னடா செய்வா…அடிப்பியா..அடிடா..அடி…எங்களக் கொண்டு பொலிஸில குடுத்து அடிவாங்க வச்சவன்தானே நீ..
‘அதுக்கென்னடா இப்ப.’:.அப்பா பாய்ந்தார்.அண்ணன் அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.
‘அப்பா நீங்க உள்ள போங்கப்பா நான் கதைக்கிறன் இவங்களோட..’ தம்பி அப்பாவ கூட்டிட்டுப்போ….. உள்ள போ’
சண்டைகளை விலக்கும் சமாதானப் புறாவாக அண்ணன் நிற்பது பண்டாவுக்கு உள்ளுர பெருமையாயிருந்தது..இப்படித்தான் ‘இடியப்ப பெட்டி’ச் சண்டையிலும் அவன் நடந்து கொள்வது ஞாபகம் வந்தது.

நிலைமைகள் எல்லை மீறிப்போய்க் கொண்டிருந்தன.பண்டாவின் அப்பா அவனை நோக்கி கை ஓங்கினார்.அங்கு நின்றிருந்தவர்களுள் ஓருவன் திடீரென தனது இடுப்பில் சொருகியிருந்த கத்தியொன்றை எடுத்து எதிர்பாராத விதமாக அப்பாவை குத்தினான்.அப்பாவடன் தள்ளுமுள்ளுப் பட்டுக்கொண்டிருந்த அண்ணன் அப்பாவை இழுத்து விலக்கினான். விலக்கும்போது நடந்த இழுபறியில் அண்ணனது நெஞ்சில்தான்; கத்தி இறங்கியது.
‘ அப்பா ‘ என்று கத்தியபடியே அண்ணன் நெஞ்சைப் பொத்திக்கொண்டு கீழே விழுந்தான்.கத்தியால் குத்தியவனே அதனை எதிர்பார்க்கவில்லை.திடுக்கிட்டுப் பார்த்தபடியே வந்த இருவரும் அவ்விடத்தை விட்டு ஓடத்தொடங்கினர்.

‘ எண்ட மகனே… மகனே…’ அப்பாவின் அழுகுரலும் தரையில் விழ்ந்து அலறும் அண்ணனும். அப்பா அண்ணனைப் பார்ப்பாரா அன்றி அவ்விடத்தை விட்டு ஓடிய குத்தியவர்களை துரத்துவாரா..?நிலை குலைந்தவாறே அப்பா அண்ணனை தனது கைகளில் தூக்கி தாங்கிப்பிடித்தார். பண்டாவை பயம் கௌவிக் கொண்டது.தன்னையும் குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் அவ்விடத்திலிருந்து ஓடிச்சென்றுவிட்டான்.அண்ணனின் நிலையோ அப்பாவின் கதறலோ அவனுக்கு ஏற்பட்ட மரணபயத்தில் ஒரு பொருட்டாகவே அப்போது தெரியவில்லை.
அண்ணனை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். நிலைமை சீரியசாகி விட்டிருந்தது. கட்டிலருகே அழுதபடி நின்றிருந்தான் பண்டா.நடந்த சம்பவங்களை கண்முன்னே அரங்கேறிய அந்த பயங்கரங்களை நினைத்து நினைத்தே அழுதான் பண்டா.
டொக்ரர் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார். ”கத்தி அப்படியே நெஞ்சில் ஆழமாக பதிந்து ரத்தம் அதிகம் போய்விட்டது’

‘என்ன டொக்ரர் ரத்தம் குடுக்கோணுமா….சொல்லுங்க நான் தாறன்’…அப்பா சொன்னார்.
‘இல்ல பொறுங்க எப்பிடி எண்டு பார்ப்பம்” டொக்ரர் போய்விட்டார். கட்டிலில் கண்ணை மூடியவாறு பேச்சின்றி கிடந்தான் அண்ணன்.

நேஸ்மார் வந்து செயற்கைச் சுவாசமும் சேலைனும் கொடுத்தார்கள்.அண்ணனையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான் பண்டா.அவனது சமாதானப்புறா சிறகொடிந்து கிடக்கிறது. கண்களில் கண்ணீர் வழிந்தோட வெறித்தபடியே நின்றிருந்தான் அவன்.
நேஸ் ஒருவரிடம் பண்டா கேட்டான்…மிஸ்ஸம்மா ரத்தம் குடுக்க்கோணுமா அண்ணனுக்கு.’தான் ரத்தம் கொடுக்க தயாரென்ற மனநிலையில் அவன் இருந்தது நேசுக்கு புரிந்திருக்குமோ என்னவோ நேஸிடமிருந்து பதிலே இல்லை.அப்பா அங்குமிங்கம் ஒடிக்கொண்டு திரிந்தார்…அண்ணனுக்கு மூச்சு இழுத்தது.
சற்று நேரத்தின் பின் அமைதியானான் அண்ணன்.சுகம் வந்துவிட்டதோ என நினைத்து கட்டிலுக்கு அருகே வந்த பண்டாவை அப்பாவின்
;ஓ’ வென்ற சத்தம் திக்கு முக்காட வைத்தது.

அண்ணன் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.கட்டிலில் வீழ்ந்து கதறிய பண்டாவை அப்பா கட்டி அணைத்தார்.

” மகனே உண்ட அண்ணன் பொயிற்றான்டா”
அப்பாவின் கைகளை வெறுப்படன் தட்டி விட்டவாறே எழுந்து நின்றான் பண்டா. அவரை வெறித்தபடி கோபமாக பார்த்தான்.
‘உன்னாலதான் அண்ணன் செத்தான் இதவிட நீ செத்திருக்கலாம்..’ அழுதுகொண்டே சொன்னான்.இதனை பண்டாவின் அப்பா எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது பண்டாவுக்கும் தெரியும்.நிலைகுலைந்து போனார் அவர்.

பின்னர் இருவருமே சேர்ந்து அழுதது அங்கிருந்த எல்லோரையுமே; சோகத்தில் ஆழ்த்தியது.வயோதிபமும் வறுமையும் சேர்ந்து நிர்க்கதியாய் நிற்கின்ற தகப்பனுடன் தனக்கான எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்ற பயமும் ஏக்கமும் பண்டாவின் மனதில் தோன்றின.

சிகரெட் அதன் பாட்டில் புகைந்து முடிந்து விரல்களைச் சுட்டபோது திடுக்கிட்ட பண்டா மீண்டும் இன்னொரு தடவை கொழும்பு வந்து சேர்ந்தான்..அவனது பஸ் இன்னமும் நின்ற இடத்திலேயே நின்றிருந்தது.

அவ்விடத்தில் சற்று ஆரவாரம் நிலவுவதை அப்போதுதான் பண்டாவினால் உணர முடிந்தது.என்ன நடந்தது பார்க்கலாம் என்று எழுந்தான். ‘முன்னுக்கு அக்ஸ்ஸிடன்ற்றாம்.. ;அக்ஸ்ஸிடன்ற்றாம’; என்றவாறே கதைத்துக்கொண்டு செல்பவர்களின் பின்னால் பண்டாவும் ஓடினான்.

அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்க முன்பே அவ்விடத்திற்கான காட்சிப்படுத்தலில் அழுகையும்..ஆரவாரமும்..பரபரப்பும் அதிகரித்திருந்தன.பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிவந்த பஸ் ஒன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டதிற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸ’டன் மோதுப்பட்டுக் கிடந்தது.பாடசாலை மாணவர்கள் பலர் காயப்பட்டிருந்தனர்.சிலரது நிலை கவலைக்கிடமாக காணப்பட்டது. அம்பியுலன்ஸ் வண்டிகள் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தன.அவற்றின் அலறல் சத்தங்கள்…மாணவர்களின் அழுகைச்சத்தங்கள்… பாதிக்கப்பட்ட உறவினர்களின் ஓலங்கள். கூடியிருந்த சனக்கூட்டத்தை விலக்கித்தள்ளி முண்டியடித்து மாணவர்களுக்கு சமீபமாக சென்ற பண்டா நிலை குலைந்து நின்றான்.
பாடசாலை வெள்ளை யுனிபோர்ம் அணிந்த – காயப்பட்ட மாணவன் ஒருவனை ஸ்ரெச்சரில் தூக்கிச்சென்று அம்பியுலன்ஸ வண்டியில் ஏற்றினர். அண்ணனின் வயதையொத்திருந்த அந்த மாணவனின் முகம்.அழுதுகொண்டே சென்ற அவனது பார்வை பண்டாவின்மேல் பட்டுச்சென்று மறைந்தது.வாகனத்தின் பின்னால் ஓடிச்சென்று பார்த்துவிடத் துடித்த பண்டாவை ட்ரைவரின் சத்தம் உலுப்பியது.

‘ என்ன பண்டா போறல்லயா… என்ன யோசிக்கிறா’
‘ இல்ல அண்ணன் சரியா என்ட அண்ணனைப் போல ஒர பொடியன் கிடந்தானண்ணன்…அவன்ட முகத்தப் பார்க்க..’அழுகுரலில் பண்டா.

‘ சரி! சரி..!பாவந்தான் என்ன செய்யுற.. எலக்ஷன் மீற்றிங்குக்கு ஆக்கள ஏத்திப்போன வாகனத்திலதான் பிழையாம். ஓவர் ஸ்பீற்.. ட்ரைவர் நல்ல தண்ணியில இருந்திருக்கான்….நாம என்ன செய்யற வா போவம். ‘பஸ் ட்ரைவர் சொல்லி முடித்தான்.
மாலை பஸ்ஸை முதலாளி வீட்டில் ட்ரைவரையே கொண்டுபோய் விடச்சொல்லிவிட்டு நேராகவே ஆஸ்பத்திரிக்கு ஓடினான் பண்டா.பார்வையாளர் நேரம் முடிந்திருந்தது.கேற் செக்குயுரிற்றியை கெஞ்சிக் கூத்தாடி உள்ளே சென்றுவிட்டான்.விபத்தில் காணப்பட்டவர்களுக்கான வார்ட் முற்றாக அந்த மாணவனை தேடித்திரிந்தான் பண்டா.அவனைக் காணவேயில்லை.ஆம் அந்த மாணவனுக்கு என்னாவாயிற்று என்ற ஏக்கம் அவனது அடிமனதை எரித்தது.யாரிடம் கேட்பான் அவன்.என்ன சொல்லிக் கெட்பான் பெயர் ஊர் எதுவுமே தெரியாமல் அந்த முகமும் பார்வையும் தந்த அண்ணனின் சாயல்கொண்ட அந்த மாணவன்..? தன் அண்ணனை காப்பாற்ற முடியாமல் போன தனது இயலாமையை அண்ணனை ஞாபகமூட்டிய அந்த மாணவனையாவது காப்பாற்றிக் கொள்ளும் தனது முயற்சி கைகூடாததில் சலித்துக்கொண்டான் பண்டா.
அவனது கண்முன்னே அவனது அப்பா…அந்த வெற்றிபெற்ற அங்கத்தவர்.. அண்ணன்..அவர்களது சில்லறைக்கடை…தேர்தல் பரப்புரைகள். அப்பாவுடன் சண்டையிட்ட அந்த நபர்கள்…அண்ணன் வாங்கிய கத்திக்குத்து….இறுதியாக தேர்தல் மீற்றிங்குக்கு சென்ற வாகனத்தில் அடிபட்ட அந்த மாணவன் இவனைப்பார்த்த பார்வை என எல்லாமே அவன் நினைவில் வந்து வந்து நர்த்தனமாடி நின்றன.

‘என்னடா இது.. ?….சே’ என்றவாறே காலை தரையில் உதைத்து உரசி எறிந்தான் பண்டா.பாட்டா செருப்பு பறந்து சென்று வீழ்ந்தது.இன்றைக்கு பண்டாவுக்கு அரைப்போத்தல் போதாது.

சபா சபேஷன்.