இலக்கிய உலகை விட்டு விடை பெற்றார் சிறுகதையாளர் நந்தினி சேவியர்!

சிறுகதையாளர் நந்தினி சேவியர் இன்று (16.09.2021) தனது 70 வது வயதில் சுகயீனம் காரணமாக திருகோணமலையில் காலமானார்.

(க.மங்களேஸ்வரி -திருகோணமலை)

நந்தினி சேவியர் என்றவுடன் தமிழ் பாடப் புத்தகத்தில் வந்த சிறுகதையாளர் என்றே நினைவிற்கு வரும். அந்தவகையில் சேவியர் என்ற இயற்பெயருடைய சிறுகதையாளர், நந்தினி சேவியர் யாழ்ப்பாணத்தில் மட்டுவில் சாவக்கச்சேரியில் 1949 – 5 -25ல் பிறந்தார். திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கியமே மூச்சி, வாசிப்பு, எழுத்துரைப்பு, கலந்துரையாடல் என்று நெறிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இளமைக் காலத்திலிருந்து பொதுவுடமைக் கொள்கைகளையும் கருத்துக்களையும் காண்பித்து மானிட நேயம் மிக்க மாக்ஸியவாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நந்தினி சிறுகதை, நாவல், ஆய்வு, அறிமுகக் கட்டுரை, விமர்சனம் ஆகிய பல முயற்சிகளிலும் ஈடுபட்ட இவர் சகல துறைகளிலும் பாண்டித்தியம் மிக்க பண்பாட்டு எழுத்தாளராவார்.சாதியத்தை கடுமையாக எதிர்ப்போரில் இவரும் ஒருவர். அதனால் சாதி பார்த்துப் பழகுபவர் யாராக இருப்பினும் அவர்களையெல்லாம் முற்றாக வெறுத்தார்.

அனைத்து மனிதர்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும் சாதியைச் சொல்லி யாரையும் அடிப்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

1967 ல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதத் தொடங்கியவர் தொடர்ந்து தாயகம், சிந்தாமணி, மல்லிகை, வீரகேசரி, தினகரன், தினக்குரல், வாகை, தொழிலாளி, அலை, புதுசு, ஈழமுரசு, இதயம், ஈழநாடு, ஒளி, சுட்டும் விழி, தூண்டி, கலை ஓசை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தனது ஆளுமையை நிலை நாட்டியவர். தற்போதும் இவர் தனது முகப்புத்தகத்திலும் சமூக அவலங்களையும், அரசியல் ஊழல்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எழுதி வந்தவர்.

இவரது சிறுகதைத் தொகுதியானது, அயற்கிராமத்தை சேர்ந்தவர்கள் (1993), நெல்லிமரப் பள்ளிக் கூடம் அகிய இரண்டு சிறுகதைப் புத்தகங்களையுமே இதுவரையில் வெளியிட்டிருக்கிறார். காரணம் கேட்டபோது “நான் வாழ்நாள் முழுவதும் வாசகராகவே வாழ விரும்புகிறேன் ” எனப் பதிலளித்தார்.

இரண்டு நாவல்கள் இதுவரை எழுதியிருக்கிறார். ஈழநாடு எனும் பத்திரிகையில் 10 வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்திய நாவல் போட்டியில் ஒரு நாவல் 2ம் பரிசு பெற்றது.

மற்றும் இரண்டு குறுநாவல்களையும் எழுதிய இவரது குறுநாவல்களில் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழத் தமிழ்ச் சங்கம் தனது 50வது ஆண்டு நிறைவையொட்டி நாவல் போட்டியில் தங்கப் பதக்கத்தை முதற் பரிசாகப் பெற்றது.

இவர் தனது சிறுகதையில் வாழ்கைக் கோலங்களையும், அதில் இடம்பெறும் சில துன்ப நிகழ்வுகளின் சில பகுதிகளையும், தான் அனுபவித்த சில இன்னல்களையும் அனுபவித்து எழுதிய இவரது சிறுகதைகள் உயிரோட்டமும், கருத்தாழங்களும், வாசிக்கும் போது ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளுகையும் மிகச் சிறப்பாகவே சிறுகதைக்குள்ள தன்மையினை நிலைநாட்டியுள்ளன.

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற சிறுகதை 1994ல் சுதந்திர இலக்கிய விருதும், தமிழின்பக் கண்காட்சி விருதும் பெற்றது. நெல்லிமரப் பள்ளிக்கூடம் என்ற சிறுகதை கொடகே தேசிய சாகித்திய விருதும் (2012), அரச இலக்கிய விருதும் (2012), வடமாகாண சிறந்த நூல் விருதும் (2012) பெற்றவர்.

இவ்விருதுகளோடு மட்டும் நின்று விடாது தேசிய வாசிப்பு மாத 2008 எழுத்தாளர் கௌரவ விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது (2011), தமிழ் விழா 2013 கௌரவ விருது (யாவர்க்குமாம் தமிழ் 2013) , கலாபூசணம் 2013 அரச விருது போன்ற பற்பல விருதுகளையும் பெற்று சாதாரண மனிதராகத் திகழும் நந்தினி சேவியர் என்ற தற்பெருமையற்ற எழுத்தாளரை ஈழம், எழுத்துலகின் கொடையாக எமக்குத் தந்திருக்கின்றது.

ஒரு எழுத்தாளரையும் தாண்டி வாசகனாகவும், பாடசாலைகளில் தன்னை அழைக்கும் போது மகிழ்சியோடு வந்து மாணவர்களை ஊக்கப்டுத்தி அவர்களுக்கு வழிகாட்டாலையும் வழங்கி எழுத்துலகில் இட்டுச் சென்ற திருகோணமலையின் 72 வருடகால அனுபவ முதுசமாகத் திகழும் நந்தினி சேவியர் ஐயாவை ப் பற்றி எழுதுவதில், நானும் எனது எழுத்துக்களும் பெருமையடைகிறது.