ஈழ தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வரதகுமார் காலமானார்!

ஈழத் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சிறந்த சமூக சேவையாளரும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தகவல் மையத்தின் (T.I.C) நிறுவுனருமான திரு.வரதகுமார் சுகவீனம் காரணமாக நேற்று புதன்கிழமை லண்டனில் காலமானார்.

T.I.C வரதகுமார் என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அழைக்கபப்டும் இவர் பல ஆளுமைகளை கொண்டவர். பல அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட்டு வந்த வரதகுமார் தன்னை பிடிக்காதவர்களை கூட பகைமை பாராமல் இன்முகத்துடன் அரவணைத்து செயற்பட்டுவந்தார்.

பல தசாப்த காலங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உழைத்தவர். மிக சிறந்த ஆங்கில மொழிப் புலமையும் அறிவும் ஆற்றலும் கொண்ட வரதகுமார் தனது உடல் நிலை, முதுமை என்பவற்றையும் பொருட்படுத்தாமல் எல்லா நிகழ்வுகளுக்கும் சென்று வந்ததுடன் தனது தமிழ் தகவல் மையத்தினூடாக பல பணிகளை ஆற்றியுள்ளார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள் தொடர்பில் பல நூற்றுக்கணக்கான வெளியீடுகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிக்கொண்டு வந்ததுடன் மகாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் என்று ஏராளமான நிகழ்வுகளையும் அவர் நடத்தியுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தனது இறுதி காலத்தில் மிகவும் கவலை கொண்டிருந்த வரதகுமார், அது தொடர்பில் பல தகவல்களை சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக செயற்பட்டிருந்தார்.