(காரைதீவு  நிருபர் சகா)

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேசசபையை வழங்குவதை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் மிகுதிப்பரப்பை மூன்றாகப்பிரிக்கவேண்டுமானால் 1987க்குமுன்பிருந்த பிரிப்புப்போன்று பிரிப்பதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம்.

இவ்வாறு நேற்றுமுன்தினம் கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரம் தொடர்பாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபா கூட்டியகூட்டம் தொடர்பாக அதில் கலந்துகொண்ட ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
கல்முனை மாநகரசபை பிராந்தியத்தை நான்காகப்பிரித்தல் என்ற விடயத்தில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்னிலையில் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தோம்.

நானும் பங்குபற்றியிருந்தேன். நியாயமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கொள்கையளவில் இருதரப்பும் பல விடயங்களை ஏற்றுக்கொண்டது ஆரோக்கியமானதொரு நிலைப்பாடாகும்.
இதேவேளை சாய்ந்தமருதை விடுத்து எஞ்சியபகுதியில் மூவினமக்களும் அனைவரும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்பது எமது கருத்து.

சாய்ந்தமருது பிரிக்கப்படவேண்டும் என அந்த மக்கள் கேட்டுள்ளார்களே தவிர மீதியை பிரிக்குமாறு தமிழ்மக்களாகிய நாம் ஒருபோதும் கோரவில்லை.

ஆனால் பிரதியமைச்சர் ஹரீஸின் திட்டத்தில்மிகுதிப்பரப்பை 3ஆகப்பிரிக்கவேண்டும் என்றிருந்தால் 1987க்கு முன்பிருந்த முறைப்படி பிரிக்கமுடியாது. அதனை நாம் ஆட்சேபிக்கின்றோம்.

அப்படி எஞ்சிய பரப்பை மூன்றாகப் பிரிப்பதாயின் தமிழ்ப்பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு நகரசபையைத் தரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். மீதியை எத்தனைசபைகளாக வேண்டுமென்றாலும் பிரியுங்கள் என்றார்.