வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள முகத்துவாரப் பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் சேதமடைவதாகவும், இதனை நிவர்த்தி செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 350 மீன்பிடிப் படகுகள் காணப்படுவதாகவும், இவர்கள் துறைமுகத்துக்கு மாதாந்தம் ஒரு படகுக்கு நிருவாக செலவுக்காக 900 ரூபாய் பணம் வழங்குவதாகவும், உரிய முறையில் பணம் அறவிடும் நிருவாகம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க முகத்துவார வழியினூடாக செல்லும் போது அந்தவழியால் காணப்படும் கற்பாறைகள் நீரில் மறைந்து காணப்படுவதால் கண்களுக்கு தென்படாமல் அதனூடாக செல்வதால் படகுகள் பாறைகளில் மோதி சேதமடைகின்றது. இது ஆற்றில் நீர் அதிகரிக்கும் காலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் மாத்திரம் இருபது படகுகள் சேதமடைந்துள்ளதுடன், இந்த வாரத்தில் மாத்திரம் நான்கு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் பாரிய சேதங்களுக்கு மாத்திரம் இன்சூரன்ஸ் பணம் வழங்குவதாகவும், பகுதியளவு சேதங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.