மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.உதயகுமார் இன்று வியாழக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் ஆசியையும் பெற்றுக்கொண்டார். பின்னர் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.
மத வழிபாடுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு சென்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றினார்.