நாட்டில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்கம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கின்றது. நாளை அல்லது நாளை மறுதினம் எரிபொருளுடன் மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடையும். மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது.” என கூறியுள்ளார்.

இதனிடையே, நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்தி காரணமாக இன்று மாலை முதல் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக காத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.