பிரித்தானியாவில் நடுவானில் சிறிய ரக விமானமும், ஹெலிகொப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள (Waddesdon) இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தில் விமானி மட்டும் இருந்ததாகவும், ஹெலிகொப்டரில் மூன்று பேர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நடந்துள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் 12.06 மணிக்கு விபத்து நடந்த இடத்தை அடைந்துவிட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து Air Accidents Investigation Branch விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விபத்திற்கான காரணம் மற்றும் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.