இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரனில் விக்ரமசிங்கேயிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு தனித்துவமானது; இணக்கமானது; தோழமையானது. இந்த உறவு வரலாறு, கலாசாரம், இனம், நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ‘‘வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, இந்திய, இலங்கை உறவின் முக்கிய அம்சம் ஆகும். இலங்கையுடனான தனது உறவின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது’’ என்றும் குறிப்பிட்டார். ‘‘இலங்கையை ஸ்திரமான, வளமான நாடாக உருவாக்கும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற இந்தியா தனது ஆதரவை அளிக்கும்’’ எனவும் ரனில் விக்ரமசிங்கேயிடம் ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோருக்கு மதிய விருந்து அளித்தார். பின்னர் இரு பிரதமர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட இலங்கையில் இந்தியா செய்துவரும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்தும் இருவரும் பேசினார்கள்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்போது, ‘‘இருதரப்பிலும் இருநாட்டு உறவுகள் குறித்தும், வரலாற்று ரீதியான, நட்பு ரீதியான இரு நாடுகளுக்கு இடையேயும் உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் முழுமையான அளவில் பேசப்பட்டது. இலங்கையில் இந்தியா இப்போது செய்துவரும் மேம்பாட்டு திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ள மேம்பாட்டு திட்டங்கள், மீனவர் பிரச்சினை உள்பட அனைத்து இருநாட்டு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்றார்.

பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.