மட்டக்களப்பு, ஏறாவூர். சவுக்கடி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரது வீட்டிற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம் மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தனது வீட்டை விற்றுவிட்டு வழக்குப்பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளதனால் அந்த வீட்டை எவரும் வாங்கவேண்டாம் கொலையாளிக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதுவும் ஆர்ப்பாட்டக்காரர்களது கோரிக்களாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவண்ணம் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சந்தேகத்தின்பேரில் சவுக்கடி பிரதேசத்தைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டில் கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவம் எங்கும் இனிமேல் நடக்கக்கூடாது என்றும், கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.