முன்னால் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்சவை, உடனடியாக கைது செய்வதற்கு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, நேற்றுமுன்தினம் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு கட்சிகளினதும் முக்கிய தலைவர்கள் பலரும், காவல்துறை மா அதிபருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பௌத்த பிக்குகள் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றதையடுத்தே, நேற்றுமுன்தினம் கோத்தாபய ராஜபக்சவின் கைது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தாம் சட்டம், மற்றும் நீதித்துறை விவகாரங்களில் எந்தத் தலையீடும் செய்யவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியையும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற சூழலில், கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அந்த முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.