தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

 

கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன.

குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது தமது சுய லாபங்களுக்காக அரசின் முடிவுகளுக்குத் தலைசாய்த்துவருவதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ஆனந்தசங்கரி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலரே கலந்துகொண்டனர். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை, கூட்டணிக் கட்சியினர் தமது பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அதில் பெறும் வெற்றி மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.