கிழக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏறாவூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆளுனரின் கைகளில் கிழக்கு மாகாணசபை கொடுக்கப்பட்டு, அபிவிருத்திகள் முடக்கப்பட்டு, பாரபட்சமாக, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு அபிவிருத்திகள் நடத்தப்பட்ட வரலாற்று துரோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என கேட்கின்றோம்.
தேர்தலை நடத்தாமல் மாகாணசபையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடு தொடர்பில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
கபடத்தனமாக கிழக்கு மாகாணசபை ஆட்சியை கவிழ்ந்துள்ள நிலையில் அதனை தமது சுய லாபத்திற்காக அரசாங்கம் அதனை பிற்போடுகின்ற நிலையில் அதற்கு துணை போன எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு பதில் கூறியாக வேண்டும்.
கடந்த ஆண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவினை 10ஆயிரமாக எதிர்வரும் ஆண்டு அதிகரிக்கும் பணிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.
ஆனால் ஆளுனர் அதனை தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.
எதிர்வரும் ஆண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாவினை சம்பளமாக பெறுவதற்கான நடவடிக்கையினை ஆளுனர் செய்ய வேண்டும்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுத் தாக்கல் கோரப்பட்டால் நியமனங்கள் வழங்கப்படுவதில் பாரிய சவால்கள் ஏற்படும்.
அத்துடன், 40புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணசபை என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்று கேட்குமளவுக்கு கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட, சதித்திட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதற்கு மத்திய அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவும், கிழக்கில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.