அறிவார்ந்த கல்வியை மட்டும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதால் அவர்கள் வாழ்வில் முழுமைபெற முடியாது மாறாக அறிவார்ந்த கல்விக்கு சமாந்தரமாக அல்லது அதற்கு மேலாக ஒழுக்கம் நிறைந்த கல்வியையும் கற்க வேண்டியது அவசியமாகும்.

ஒழுக்கம் இல்லாத ஒருவரிடம் எவ்வளவுதான் கல்வி அறிவு இருந்தாலும் அவரை சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டாது. இதனை எமது மூதாதையர் மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளனர்.

எனவே எமது மாணவர்கள் தம்மை ஈன்றெடுத்த தாய், தந்தையரையும் அதே போன்று அறிவைப் புகட்டுகின்ற ஆசிரியர்களையும், பெரியோர்களையும் பணிந்து நடந்தால் மாணவர்களின் வாழ்வு சுவிட்சமானதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான தலைவருமான முருகேசு இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

பாண்டிருப்பு மகா விஷ்னு வித்தியாலயத்தில்  தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு இப்பாடசாலை அதிபர் ஆர்.உதயன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்,

கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல. கல்வி கற்க வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் மனதில் உறுதி கொள்ளல் அவசியம். அன்று நாங்கள் பல்வேறுபட்ட வசதியீனங்களுக்கு மத்தியில் கல்வி கற்றோம். ஆனால் இன்று கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அரசாங்கமும் கல்விக்காக பெருமளவு நிதியை வழங்குகின்றது. ஆகவே ஒவ்வொரு மாணவர்களும் தாம் எதிர்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும் என்று உறுதியுடன் செயற்பட்டு கல்வியை கற்க வேண்டும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இன்று கௌரவம் பெறுகின்றனர். இவர்கள் இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதே வேளை இப்பரிட்சையில் சித்தியடையவில்லை என்று எவரும் கவலைப்படக் கூடாது. தோல்விதான் வெற்றியின் முதல்படியாகும். முயற்சி செய்தால் அது என்றோ ஓர்நாள் வெற்றியைத்தரும். இறைவன் சகலரையும் சமமாகவே படைக்கின்றார். ஆகவே நாம் பணிவுள்ளவராகவும், முயற்சியுள்ளவராகவும் வாழ முற்பட்டால் கல்வியில் மட்டுமல்ல சகல துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும்.

இன்று நான் மாகாண சபை உறுப்பினர் அல்ல. எதிர்காலத்தில் நான் மாகாண சபை உறுப்பினராகலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் எமது மக்களின் நலனுக்கான எனது பணி தொடரும். அதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் உழைப்பேன் என்றார்.

இந்நிகழ்வில் இப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களான மு.லோஜிதன் (168 புள்ளி) நி.கேதுஜன் (156 புள்ளி), இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி.சறோஜினி முரளிதரன் ( சுசிலா ரீச்சர்), ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர் த.சத்தியகீர்த்தி, இப் பாடசாலை அதிபர் ஆர்.உதயன், துரவந்தியமேடு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை அதிபர் செ.பேரின்பராசா, ஆசிரியை சசிலதா இராசதுரை ஆகியோரும் உரையாற்றினர்.