கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கான கோரிக்கையாக காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமைக்குமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் என்பதற்கு அமைவாக கல்முனை மாநகர சபையினை பிரிப்பது தொடர்பில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்இ கல்முனை மாநகர சபையினை பிரிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கின்றேன்.

கல்முனை நகரமானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாக இருந்துவருகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கல்முனை தமிழர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் தேடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்குமாறு பிரதான முஸ்லிம் கட்சிகள் கோரி நிற்கின்றன.  இக்கோரிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்முனை வாழ் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான கோரிக்கையாகவே இதனைப் பார்க்கின்றேன்.

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட சாய்ந்தமருதை தனியாக பிரித்து தனி பிரதேச சபையினை வழங்குமாறு கோருகின்றனர். அவ்வாறு பிரிந்து செல்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் 4ஆக பிரித்து தமிழர்களை ஒடுக்கி ஆள நினைப்பதை அனுமதிக்க முடியாது. சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்கின்றபோது முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைந்து தமிழ் மக்களுக்கு பேரம்பேசும் வாய்ப்பு ஏற்படுவதோடு தமிழ் மக்களின் ஒருமித்த வாக்குப் பலத்தினால் கல்முனை மாநகர முதல்வராகவும் வரமுடியும், இதனால் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகி விமோசனம் பெறுவார்கள் என்பதற்காகவே கல்முனையை 4ஆக பிரிக்க கோருகின்றனர்.

கல்முனை நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் இல்லை ஆனால் அவர்களின் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் உள்ளது என்பதற்காக தமிழர்களின் பிரதேசத்தை முஸ்லிம்களின் பிரதேசமாக உரிமைகோர விளைகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அமைச்சர்களான ஹக்கீம்இ றிசாத் போன்றவர்களின் கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிப்பதோடு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமையுங்கள். அதற்கு மேலதிகமாக பிரிக்க முற்படுவதானால் கல்முனை தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ரீதியில் ஒரு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும்.

எனவே சமகாலத்தில் இச்சபைகளை குறிப்பாக தமிழர்களுக்கு என்று ஒரு சபையையும் சாய்ந்தமருது மக்களுக்கு என்று ஒரு சபையையும் உருவாக்கி தரவேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசுக்கு இருக்கின்றது. ஆகவே உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இவ்விடயத்தில் அக்கறைகொண்டு கல்முனையில் வாழையடி வாழையாக வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உடனடியாக செயற்பட்டு ஒரு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டிகொள்வதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.