கல்முனைப் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் இரகசியமான முறையில் போதைப் பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகின்ற ஒரு கும்பல் நடமாடித் திரிவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கூடிய கரிசனை செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

சமீப காலமாக கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் விரும்பத்தகாத செயல்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கை தனது மக்கள் சந்திப்பு பணிமணையில் நடாத்திய போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாடசாலை மாணவர்கள் மற்றும், அரச திணைக்களங்களில் பணியாற்றும் பெண்களை காம வலையில் வீழ்த்தி அவர்களை பெற்றோருக்குத் தெரியாமல் கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் பல எமது பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. இதற்குக் காரணம் இவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகள் மீது அவதானம் செலுத்தாமலும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்காமலும் விடுகின்ற தவறுகளாகும்.

நாம் மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்னர் எமக்கான பாதுகாப்பை நாம் தேடிக்கொள்ள வேண்டும். விரும்பத்தகாத செயல்களை யாராவது அரங்கேற்ற முயன்றால் அது தொடர்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டியது சமுகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

பாடசாலை மாணவர்கள் பிரத்தியோக வகுப்புக்களுக்கு செல்கின்ற நேரம் திரும்பிவருகின்ற நேரம் எங்கு அவர்களுக்கு பிரத்தியோக வகுப்பு இடம்பெறுகின்றது என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது கட்டாய கடமையாகும்.

நுண்கடன் வழங்குவது என்ற போர்வையில் ஒரு சில நபர்கள் விரும்பத்தகாத செயல்களை கிராமப் புறங்களில் மேற்கொண்டுவருகின்றமையை அறிய முடிகின்றது. பொதுமக்கள் நுண்கடன் பெறுவதைத் தவிர்த்து சமூர்த்தி வங்கிகள், அரச வங்கிகள் என்பவற்றில் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற முடியும். இவ்வாறான வசதிகளை விட்டுவிட்டு கடன்தொல்லையில் மூழ்கி தற்கொலை மரணங்களை தழுவுவதையும் குடும்பப் பிணக்குகள் ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்முனைக் தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா, ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் வ.அழகரெத்தினம் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.