கர்ப்ப காலத்தின் இரண்டாம் முப்பருவ முடிவு வரை கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படியிருக்குமோ என்கிற பயத்தில் கர்ப்பிணிகளின் மனம் தவிக்கும். 7ம் மாதத்தைக் கடந்துவிட்டாலோ அவர்களது பயம் வேறு மாதிரி மாறிவிடும்.சுகப்பிரசவமாகுமா, சுகப்பிரசவ வலியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்றெல்லாம் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடும். அடிக்கடி ஷாக் அடித்தது போல ஏற்படுகிற வலி நிஜமான வலியா, பொய் வலியா எனத் தெரியாமல் கலங்குவார்கள். குறைப்பிரசவமாகி விடுமோ என மிரள்வார்கள்.கர்ப்பிணிகளின் உண்மையான பிரசவ வலி எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மருத்துவர் உங்களுக்குக் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறதா? அந்த நாட்களில் அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருக்கிறதா? அப்படியானால் அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரேநாளில் இப்படி பலமுறை வலியை உணர்கிறீர்களா?உங்களுடைய கர்ப்ப வாயானது அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். முதல் முறை வலி ஏற்பட்டதுமே ஏதேனும் ஆகிவிடுமோ என பயப்படத் தேவையில்லை. அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் சுதாரித்துக்கொண்டு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் விரையலாம்.

இடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதும், மீண்டும் இழுத்துப் பிடிப்பதும் விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள். சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.

பனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.கர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.

கர்ப்ப வாயானது குழந்தையை வெளியே அனுப்பத் தகுந்தபடி விரிந்துகொடுக்கும்போது அந்தப் பகுதியில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் தொந்தரவு செய்யப்பட்டு ரத்தப்போக்கு ஏற்படலாம். பிரசவம் நெருங்கும் நேரத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு என்பது அவசரகால சிகிச்சையாகக் கருதப்பட்டு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியையும் அசவுகரியத்தையும் உணர்கிறீர்களா? அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.

தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா? ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது.மேலே குறிப்பிட்டவை எல்லாம் பொதுவான அறிகுறிகள். இவற்றைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப கால அனுபவங்களும் அவதிகளும் வேறு வேறு மாதிரி இருக்கலாம். எனவே பிரசவம் நெருங்கும் நேரத்தில் அப்படி நீங்கள் உணர்கிற எந்த வித்தியாசமான அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் கேட்டுத் தெளிவடைவது உங்களையும் நீங்கள் சுமக்கும் உயிரையும் காக்கும்.