சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை கூட்டாக ஒழிக்க அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் ஆசியா- பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா ஜனாதிபதி ஸீ ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் ஜனாதிபதிகள் நேரடியாக சந்திப்பார்களா என்ற பலத்த எதிர்ப்பார்பு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நேரடியாக சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பை தொடர்ந்து ரஷ்யாவின் கிரிம்ளின் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரியாவில் நிலவும் யுத்தத்திற்கு ராணுவ நடவடிக்கை தீர்வை ஏற்படுத்தாது என்பதை இரு நாடுகளும் உணர்ந்துள்ளதாக கிரிம்ளின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.