இலங்கையில் தற்போது சுமார் 7000இந்து ஆலயங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த ஆயிரக்கணக்கான ஆலயங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. அனுராதபுரத்தில் 85இந்துஆலயங்கள் புதையுண்டுள்ளன. எனவே எமது அடையாளமான தொல்பொருட்கள் பாதுகாக்கப்படுவதனூடாக எமது வரலாறு பதியப்படும்.இவ்வாறு அகிலஇலங்கை இந்துசமய ஆராய்ச்சிப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட இந்துக்கிராமங்களையும் இந்து ஆலயங்களின் வரலாறுகளையும் பாதுகாக்கும்நோக்கில்  அம்பாறை மாவட்ட இந்துமத பற்றாளர்களுடனான சந்திப்பொன்று  நேற்று காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் ஏற்பாட்டாளர் இ.குணசிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து இந்துசமய ஆர்வலர்கள் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.அங்கு வரலாற்றாய்வாளர்  திருச்செல்வம் மேலும் பேசுகையில்:இந்துக்களின் அடையாளம் ஆலயங்களாகும். அவற்றின் அடையாளம் தொல்பொருட்களாகும். தொல்பொருட்கள் ஒன்றே எமது வரலாற்றை நிலைத்துநின்று சொல்லக்கூடிய ஆவணமாகும்.
இன்றைய இணையங்கள் முகநூல்கள் ஏன் நூல்கள் கூட சிலவேளை காலாவதியாகலாம். ஆனால் தொல்பொருட்கள் குறிப்பாக கல்வெட்டுக்கள் நிலைத்துநின்று எமது வரலாற்றைச் சொல்லக்கூடியன.துரதிஸ்டவசமாக எம்மவர் இவைகளை பாதுகாக்கத்தவறுகின்றனர். சிலைகள் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சற்றுசிதைவடைந்தால் அவற்றைத்தூக்கி ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ தூக்கி எறிந்துவிடுகின்றோம்.
இந்துத்தூக்கியெறிதல் என்பது நாங்களே எமது வரலாற்றை தூக்கிஎறிவதற்கு ஒப்பானதாகும்.அண்மையில் அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். முன்புசென்றவேளை நான்கண்ணுற்ற ஒரு பிள்ளையார் சிலையைக்காணவில்லை. விசாரித்தபோது அது சேதமடைந்திருந்ததால் அருகிலுள்ள வில்லுக்குளத்தில் தூக்கியெறிந்துவிட்டதாகக்கூறப்பட்டது.
அதாவது அந்த ஆலயத்தின் வரலாற்றை நாம் குளத்தினுள் புதைத்திருக்கின்றோம்.வடக்கு கிழக்கில் சுமார் 1000 ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கிலே அழிக்கப்பட்ட 500ஆலயங்கள் தொடர்பாக குரோஸ் பாதிரியார் விரிவாக பதிவிட்டுள்ளார். ஆனால் கிழக்கில் அழிக்கப்பட்ட ஆலயங்கள் தொடர்பான பதிவுகள் இல்லையென்றே சொல்லவேண்டும்.பெரும்பாலான இந்து ஆலயங்கள் பழமையானது. புராதனமானது.போத்துக்கீசர் ஒல்லாந்தர்கள் இந்து ஆலயங்களை அழித்தார்கள். ஆனால் அதன்பின்பு ஆங்கிலேயர் காலத்தில்தான் இன்றைய புராதன ஆலயங்கள் கட்டப்பட்டன.
பொதுவாக புராதன ஆலயத்தின் வரலாறு என்பது அந்தக்கிராமத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டும். ஆனால் இங்கு அப்படியில்லை.2300வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றைக்கொண்டவை ஆலயங்கள். இந்தக்காரைதீவுமண் கூட காளிகேசர் அரசனின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் இங்குள்ள ஆலயங்கள் அந்த வரலாற்றைபதிவிட்டுள்ளனவா? என்பது ஜயம்.ஒரு நூற்றாண்டு என்பத 3 தலைமுறையைக்குறிக்கும்.
கிழக்கிலே….கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மிகவும்பழமைவாய்ந்த ஆலயமாக திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தைப் பார்க்கலாம்அங்கு அந்த ஆலயத்தை போத்தக்கிசர் அழித்தபோது தூபியின்கீழிருந்த கருவறையை அழிக்கத்தவறிவிட்டனர். அது இன்றும் உள்ளது.அடுத்து வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்தைக்காணலாம். இன்றும் பல கல்வெட்டுக்கள்
உள்ளன. அடுத்த நிந்தவூர் பிள்ளையார் ஆலயம்.பெரியநீலாவணை விஸ்ணு ஆலயம் போன்றவற்றைக்காணலாம்.இதுவரை கிழக்கில் 80 கல்வெட்டுக்களை கண்டெடுத்திருக்கின்றோம்.பெரும்பாலும் இவற்றைக் குப்பையிலேதான் கண்டெடுத்தோம்.எனவே தொல்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள்மத்தியில் ஏற்படுத்தவேண்டும். பழைய அல்லது சேதமடைந்த சிலைகளை கல்வெட்டுக்களை தூக்கியெறியக்கூடாது. தொல்பொருட்களை அழியவிடக்கூடாது.
அன்று1000ஆண்டுகளுக்கு முன் கோவில் வரலாற்றை மெய்க்கீர்த்தி பதிவுஇருந்தது.ராஜராஜ சோழன் காலத்தில் இப்பதிவு இருந்தது. அதனால் இன்றும் அக்கல்வெட்டு அதன் வரலாற்றைச்சொல்லிக்கொண்டிருக்கின்றது.உதாரணமாக கந்தளாய்க்குளத்தில் ஒரு மகாயாகம் நடைபெறுகிறதென்றால் அருகிலுள்ள ஆலயத்தில் அது தொடர்பான பதிவைச்செய்யவேண்டும்.
அன்று யாப்பஹூவை ஆண்டவர்  சுந்தரபாண்டியன் என்ற அரசன். இது தொடர்பான பதிவு இன்று அங்கில்லை. ஆனால் அருகிலுள்ள குடுமிமலையில் அன்று பொறித்துவைத்துள்ள கல்வெட்டு இன்று அதற்குச் சான்றுபகர்கிறது.எனவே இன்றுள்ள எமது இருப்புக்களைத்தக்கவைக்கவேண்டுமானால் பதியவேண்டுமானால் கல்வெட்டுக்கள் அவசியம். என்றார்.அங்கு அம்பாறை மாவட்டத்திற்கான குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.
காரைதீவு  நிருபர் சகா: