உள்ளூராட்சித் தேர்தல்கள் மீண்டும் தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து பாராளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கவலை வெளியிட்டனர்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லை மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி வைக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நேற்றுக்காலை பாராளுமன்றத்தை எட்டியதும், உறுப்பினர்கள் பலரும் அதுபற்றிக் கருத்து வெளியிட்டனர்.

கூட்டு எதிரணி, ஐதேக, ஜேவிபி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டன.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினார்.

“மக்கள் இந்தத் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல்கள் பிற்போடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். உள்ளூராட்சித் தேர்தலை சாத்தியமானளவு விரைவாக நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.
அப்போது அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஐதேகவும் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாங்கள் ஏற்கனவு வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று தெரிவு செய்யும் பணிகளை தொடங்கி விட்டோம். கிராம மட்டத்தில் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு விட்டன. என்று அவர் கூறினார்.

அதேவேளை ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க, வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர்கள், அமைச்சர்கள் டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்றும், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட சிறிலங்கா சுதந்திரக் கட்சியே முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கை என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமது அதிகாரம் முழுவதையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விவாதத்தை செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, உள்ளூராட்சித் தேர்தல் கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல்களை பிற்போடுவதற்கு நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும் அவர் எதிர்ப்பு வெளியிட்டார்.