புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பிக்கின்றது.

கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இன்று அங்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இரா.சம்பந்தனின் இந்தக் கலந்துரையாடல் நாளை மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் நடைபெறவுள்ளது.

இதில் கூட்டமைப்பின் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்களின் போது பொதுமக்களுக்கு உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்துவோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் இந்தப் பரப்புரை வடக்கிலும் விரைவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.