தலிபான் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவும் போது இருதரப்பு இடையே மோதல் வெடிப்பதும், உயிரிழப்பு நேரிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலிபான் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நான்கார்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்குள் மோதல் வெடித்து உள்ளது. இதில் 15 பயங்கரவாதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் வெளியாகவில்லை என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. இரு பயங்கரவாத இயக்கங்களையும் குறிவைத்து அமெரிக்காவும் வான்வழி தாக்குதலை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையே நான்கார்ஹார் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.