(துறையூர் தாஸன்)

இலங்கையில் அதிகூடிய வறுமையான ஐந்து மாவட்டங்கள்,வடகிழக்கிலயே உள்ளது. அவ்வரிசையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் முறையே வறுமையான மாவட்டங்களாகவுள்ளது. மூன்று தசாப்த அசாதரண நிலையின் பின்பு அரசாங்கம் முறைசார் நிதி நிறுவனங்களுடன் வறுமையை ஒழிக்க பல்வேறு கடன்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இவ் ஐந்து மாவட்டங்களிலும் வறுமை அதிகரித்தே காணப்படுகின்றது என, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு கடன்திட்ட ஆலோசகர் ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வங்கி கல்முனை மக்கள் வங்கி கிளையுடன் பிரதேச செயலக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நாவிதன்வெளி செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கு நிதிசார் நிபுணத்துவம் தொடர்பான விழிப்புணர்வு, பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றபோது வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாட அடிப்படை வசதிகளை வழங்காமல் வெறுமனே வருமானம் ஈட்டக்கூடிய தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதனாலேயே வறுமையான மாவட்டங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை இந்த வருட முடிவிற்குள் 4.5வீதமாக உயர்த்துவதற்கு உத்தேசித்துள்ளது. பின் தங்கிய மாகாணங்கள் தேசிய மொத்த உற்பத்திற்கு அதன் பங்களிப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தற்போது வட மாகாணம் 3.6 வீதமும் கிழக்கு 5.8 வீத பங்களிப்பினை செலுத்திவரும் நிலையில் மேல் மாகாணம் 42 வீத பங்களிப்பினை நாட்டில் செலுத்துகின்றது. ஒரு சமனான வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் வடகிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி,தனிநபர் வருமான அதிகரிப்பு,தேசிய மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு அதிகரிப்பு மற்றும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாயின் இலங்கையின் பின்தங்கிய கிராமப்புற மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிலேயே தங்கியுள்ளது.16 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர், ஆகவே இம்மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்யக்கூடிய விதத்தில் அவர்களுடைய வருமானங்களை அதிகரிப்பதன் மூலமே சாத்தியப்படும் என்றார்.