(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் மருத்துவம், சமூக சேவை, சமூக ஒற்றுமை மற்றும் இன ஐக்கிய செயற்பாடுகளில் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது ஷூரா சபையின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவருமான டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் நேற்று சனிக்கிழமை (24) தனது 79ஆவது வயதில் காலமானார். அவரது ஜனாஸா நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முதல்வர் றகீப் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது; அன்பு, பணிவு, பண்பாடு போன்ற நற்பண்புகளுக்கு சொந்தக்காரர் டொக்டர் ஜெமீல் என்று கூறினால் அது மிகையான கருத்தாகாது. அவ்வாறான நற்குணங்களாலேயே அவர் அனைவரையும் வசீகரிக்கின்ற ஆற்றலைக் கொண்டிருந்தார்.

டொக்டர் ஜெமீல் எனும் சிவில் சமூக ஆளுமை முழுக்கிழக்கு மாகாணத்திலும் மட்டுமல்ல தேசிய ரீதியிலும் அறியப்பட்டதொரு நடமாடும் அறிவுப் பெட்டகமாக திகழ்ந்தார்.

அன்னாரது இழப்பு சமூகப்பரப்பில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் தான் ஒரு வைத்தியராக இருந்தபோதிலும் தானும் தன் தொழிலும் என்று அத்துறையுடன் மாத்திரம் நின்று விடாமல் சமூக, கலாசார, கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிலும் இனங்களிடையே ஐக்கியம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளிலும் இதர சமூகப் பெரியார்களுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

யுத்த காலங்களிலும் இன முரண்பாடு, கலவர சூழ்நிலைகளிலும் இப்பிராந்தியத்தில் மக்களிடையே சமாதானம், சகவாழ்வை நிலை நிறுத்துவதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாக இருந்திருக்கிறது.

அத்துடன் தனது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார்.

பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை வெறுமனே பள்ளிவாசல் பரிபாலனத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஊரின் அனைத்து விடயங்களையும் கவனிப்பதற்காக பயன்படுத்தியிருந்தார்.

பள்ளிவாசல் ஊடாக ஊரின் வரலாற்றை தொகுத்து, அதனை நூலுருவாக்கம் செய்து, அடுத்த சந்ததியினருக்கு கையளித்துச் சென்றுள்ளார்.

தொழில் ரீதியாக நாட்டின் பல வைத்தியசாலைகளில் அவர் கடமையாற்றியிருக்கின்ற போதிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட தனது பிராந்திய மக்களுக்கான சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டிருந்தார்.

ஒரு காலத்தில் அந்த வைத்தியசாலைதான் சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களுக்குப் பொதுவாக மருத்துவ சேவை வழங்கிய ஒரே வைத்தியசாலையாக இருந்திருக்கிறது.

அத்துடன் அன்று கல்முனைக்குடியில் ஒரு வைத்தியசாலையின் தேவை உணரப்பட்டபோது அதன் உருவாக்கத்திலும் டொக்டர் ஜெமீல் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்.

இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் வைத்திய சேவையுடன் சமூக சேவைகளிலும் அவர் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார்.

அதனால் அனைத்து இன, சமூக, பிரதேச மக்களாலும் டொக்டர் ஜெமீல் பெரிதும் மதிக்கப்பட்டார். ஆக, அன்னாரது நாமம் என்றும் போற்றத்தக்கதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.