புல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் திறண்ட மக்கள் படை!
(டினேஸ்)

பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் இன்றைய தினம் (12) மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

மாவட்டத்தின் பொது அமைப்புகள், புல்லுமலைப் பிரதேச பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், கட்சி பேதமின்றிய அரசியற் பிரமுகர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கோட்டடைமுனை மெதடிஸ்த தேவாலயத்தில் இருந்து எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் புல்லுமலை பிரதேச கமநல மற்றும் பொது அமைப்புகளினால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், சூழலுக்கு விரோதமாக அமைக்கப்படும் இத் தொழிற்சாலை தேவையற்றது போன்றனவாறு கோரிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட அரசாங்க அதிபரினால் மக்களிடம் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.